திருச்சி மாநகராட்சி கம்பரசம்பேட்டை அய்யாளம்மன் படித்துறை அருகில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், பெரியமிளகுபாறை அரசு இயன்முறை மருத்துவமனை வளாகத்தில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 5 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் செயல்பாட்டினையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட உறையூர், தில்லைநகர் பகுதிவாழ் பொதுமக்களுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒன்றுக்கு 135 லிட்டர் வழங்குவதற்கு JICA திட்டத்தின் கீழ் கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள கலெக்டர் வெல் எண்.3ல் இருந்து குடிநீர் உந்தப்பட்டு உறையூர், தில்லைநகர் உள்ளிட்ட 11 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளின் மூலம் அப்பகுதிவாழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கலெக்டர் வெல் எண்.3ல் இருந்து வழங்கப்படும் குடிநீரில் இரும்பு தாது (Iron as Fe) அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் (0.60mg/ltr) இருந்ததாலும், இப்பகுதியில் குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்களிடமிருந்து தொடர் புகார்கள் பெறப்பட்டதாலும், அதனை சரிசெய்யும் பொருட்டு மாநில நிதிக்குழு மான்யம் 2021ன் கீழ் ரூ.500 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக காற்று உலர்த்தி (Aerator) அமைக்கப்பட்டுள்ளது.
இறுதி நிலையாக எதிர்வரும் 2032-ம் ஆண்டு 31.32 MLD வரை குடிநீரை காற்றூட்டம் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மண்டலம்-5க்குட்பட்ட மங்களம் நகர், உறையூர் (பழையது, உறையூர் (புதியதுபாத்திமா நகர், செல்வா நகர், சிவா நகர், ஆனந்தம் நகர், பாரதி நகர், புத்தூர் (பழையது, புத்தூர் (புதியது, ரெயின்போ நகர் ஆகிய 11 எண்ணிக்கை மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு உந்தப்படும் குடிநீரில் இரும்பு தாது அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக உள்ளதையும், கலங்கலாக வருவதையும், குறைத்து அனுமதிக்கப்பட்ட அளவில் (0.3mg/ltr) கலங்கல் இன்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கிடும் வகையில் திருச்சி மாநகராட்சி கம்பரசம்பேட்டை அய்யாளம்மன் படித்துறை அருகில்,ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக பலதட்டுகள் கொண்ட காற்று உலர்த்தி அமைப்பை உருவாக்கி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண்.4,வார்டு எண்.54,55க்குட்பட்ட பெரியமிளகுபாறை மற்றும் சின்னமிளகுபாறை ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கோடை காலங்களில் ஏற்படும் வறட்சி காரணமாக போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல், மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, இப்பகுதிவாழ் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்காக பொது நிதியின் கீழ் (2021-22) ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில், பெரியமிளகுபாறை அரசு இயன்முறை மருத்துவமனை வளாகத்தில் புதிதாக 5 இலட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது.
மேலும், 4.25 கி.மீ குடிநீர் பகிர்மான குழாய்களும், 1.24 கி.மீ குடிநீர் பிரதான உந்துக் குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெரியமிளகுபாறை மற்றும் சின்னமிளகுபாறை பகுதியில் உள்ள 685 வீட்டிணைப்புகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும் வகையில் இத்திட்டத்தையும் அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
பின்னர், அவர் பேசுகையில்: திருச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்று நிறைவேற்றி வைக்கப்படுகிறது. 10 ஆண்டுகளாக நம்முடைய அரசு இல்லாததால் எந்த பணியும் செய்ய முடியவில்லை. இப்போது நிதி சிக்கல் இருந்தபோதிலும், பல திட்டங்களுக்கு முதல்வர் அனுமதி கொடுத்துள்ளார். திருச்சி மாநகருக்கு தினமும் 90 லட்சம் லிட்டர் குடிநீர் தான் வினியோகிக்கப்பட்டு வந்தது. அது கலைஞர் காலத்தில் தான் 120 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதற்காக கலைஞர் ரூ.220 கோடி நிதி ஒதுக்கினார்.

பெரிய மிளகுபாறையில் எப்போதும் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும். அங்கு லாரிகளில் தான் குடிநீர் சப்ளை செய்யப்படும். அந்த பிரச்னையை தீர்க்க ரூ.280 கோடி ஒதுக்கி கொள்ளிடத்தில் இருந்து குடிநீர் கொண்டு வந்து குடிநீர் தொட்டி மூலம் வினியோகிக்க திட்டம் தீட்டப்பட்டது. இந்த திட்டம் தொடங்கும்போது காவிரி நீர் கேட்காமல், ஏன் கொள்ளிடம் நீர் கேட்கிறீர்கள் என கலைஞர் கேட்டார். கொள்ளிடம் நீர் தான் சுவையாக இருக்கும் என்பதால் அதை கேட்கிறோம் என்று சொன்னோம்.
இப்போது அந்த திட்டமும் முடிக்கப்பட்டு அதையும் திறந்து வைக்க இருக்கிறோம். அடுத்ததாக உறையூர், ஜி.ஹெச் பகுதிக்கும் குடிநீர் சப்ளை அதிகரித்து வழங்க இருக்கிறோம். இதன் மூலம் இனி திருச்சி மாநகராட்சியில் தினமும் ஒரு நபருக்கு 135 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்படும்.
அத்துடன் பழைய குழாய்கள் எல்லாம் மாற்றப்பட்டு புதிய குழாய்கள் அமைக்கப்படும். எடமலைப்பட்டிபுதூருக்கும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை, சாலை வசதி பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
திருச்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முதல்வர் ரூ.380 கோடி ஒதுக்கி உள்ளார். அடுத்த கட்டமாக ரூ.450 கோடியில் மார்க்கெட் வளாகம், வணிக வளாகம் கட்டும் பணி நடக்க இருக்கிறது. இதன் மூலம் மாநகராட்சிக்கு வருமானம் உயரும். சென்னையைப்போல திருச்சிக்கும் முதல்வர் அதிக நிதி ஒதுக்கி வருகிறார்.
மணப்பாறையில் முன்பெல்லாம் 7 தினங்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வரும். இப்போது 2 தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி, கொள்ளிடம் கரைகளை பலப்படுத்த ரூ.240 கோடி முதல்வர் ஒதுக்கி உள்ளார். இன்றைக்கு கூட பஞ்சப்பூரில் ரூ.270 கோடியில் 100 எம்.எல்.டி. குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முதல்வர் அனுமதி வழங்கி உள்ளார். அங்குள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ளது என்றார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின்குமார், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, சீ.கதிரவன், மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா, மாவட்ட ஊராட்சி தலைவர் த.ராஜேந்திரன், மாநகராட்சி நகர பொறியாளர் பி.சிவபாதம், முக்கிய பிரமுகர் வைரமணி, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”