திமுகவில் தலைமையில் மட்டுமல்லாமல் மாவட்டங்களிலும் வாரிசு அரசியல் செல்வாக்கு காணப்படுகிறது என்பது திமுக விமர்ச்கர்களும் எதிர்க்கட்சிகளும் முதன்மையாக வைக்கிற விமர்சனமாக இருக்கிறது.
இந்த சூழலில்தான், திருச்சி திமுகவில் மற்றொரு வாரிசு ஆளுமை தனது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடி அதகளமாக களமிறங்கியிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, திமுகவின் முதன்மைச் செயலாளரும் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேருதான் அந்த வாரிசு.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கே.என். நேரு திருச்சி மாவட்டத் திமுகவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக தனி செல்வாக்குடன் இருந்து வருகிறார்.
திருச்சியில் கருணாநிதி காலத்தில் கோலோச்சியவர் அன்பில் தர்மலிங்கம், திமுகவில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயலாளராக இருந்தார். அவருடைய மகன் அன்பில் பொய்யாமொழி மு.க. ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக இருந்தார். பொய்யாமொழியின் மகன் அன்பில் மகேஷ் மு.க.ஸ்டாலினுடைய மகன் உதயநிதிக்கு நெருக்கமானவராக இருக்கிறார். மகள் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று உதயநிதியின் அரசியல் வெற்றிக்கு துணையாக குரல் கொடுத்து வருகிறார்.
அதே நேரத்தில், காங்கிரஸ் பாரம்பரியக் குடும்பத்தில் இருந்து வந்த கே.என்.நேரு திமுகவின் முக்கிய தலைவராக உருவெடுத்தார். மாநாடு பொதுக்கூட்டம் என்று சொன்னால் இன்றைக்கும் ஏற்பாடுகளில் கே.என். நேருவை அடித்துக்கொள்ள யாரும் இல்லை. ஆனால், திருச்சி மாவட்ட 3 ஆகப் பிரிக்கப்பட்ட பின்னர், சீனியர் என்ற முறையில் கே.என்.நேரு திமுகவின் முதன்மைச் செயலாளர் பதவிக்கு உயர்ந்தார். கே.என்.நேருவுக்கு பிறகு, திருச்சியில் இன்னொரு முகம் தேவை என்ற நோக்கத்தில் திருச்சியில் அன்பில் மகேஷும் ஊக்குவிக்கப்பட்டு வருகிறார்.
பத்தாண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்ததும் கே.என்.நேரு அமைச்சரானார். அதே நேரத்தில், அன்பில் மகேஷுக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனால், திருச்சியில் கே.என். நேருவுக்கு அடுத்து திமுகவின் முகம் அன்பில் மகேஷ் என்பதாகவே பேசப்பட்டது.
இந்த சூழ்நிலையில்தான், அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு தனது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடி திருச்சி திமுகவில் தனது வருகையை அறிவித்து அதகளப்படுத்தியிருக்கிறார். இதனால், கே.என். நேருவின் ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என். நேருவுக்கு பிறகு திருச்சி திமுகவின் முகம் அருண் நேருதான் என்று தெரிவிக்கின்றனர். கே.என். நேருவின் சம்மதத்துடன்தான் அருண் நேரு களமிறங்கியிருக்கிறார் என்கிறார்கள்.
இதனால், கே.என். நேருவுக்கு பிறகு திருச்சியில் அன்பில் மகேஷ் கைதான் ஓங்கும் என்று நினைத்திருந்த அவருடைய ஆதரவு வட்டம் சற்று ஆடிப்போயிருப்பதாகவே தெரிகிறது.
அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு திமுகவில் முழு நேர அரசியல்வாதியாக களம் இறங்கியதையடுத்து அவருடைய பிறந்தநாள் இன்று (டிசம்பர் 12) திமுகவினரும் கே.என்.நேருவின் ஆதரவாளர்களும் சேர்ந்து கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். அருண் நேருவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக திருச்சி முழுவதும் அவருடைய ஆதரவாளர்கள் திருச்சி முழுவதும் திமுகவின் பாணியில் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டி அதகளப்படுத்தினர்.
அந்த போஸ்டர்கள் ‘அமைச்சரின் பிரம்மாஸ்திரமே’, ‘எங்களின் எதிர்காலமே’, `திராவிட தொடர்ச்சியே’ என அடைமொழிகளையும் புகழ்மொடிகளையும் அள்ளிவிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்கள் திருச்சியையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
அருண் நேரு, தனது பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெறுவதற்காக இன்று (டிசம்பர் 12) சென்னை செல்வதற்கு திட்டமிட்டிருந்ததால், சனிக்கிழமையே திமுகவினரை சந்திக்க அழைப்பு விடுத்தார். அவருடைய அழைப்பை ஏற்று திமுகவினர் சனிக்கிழமை மாலை 4 மணியில் இருந்தே கே.என்.நேரு கட்சி அலுவலகத்தில் திரளத் தொடங்கினார்கள்.
கே.என்.நேருவின் கட்சி அலுவலகம் அமைந்திருக்கும் திருச்சி சாஸ்திரி நகர் 2வது கிராஸ் தெருவில் பந்தல் போடப்பட்டு மேள, தாளம் என திருவிழாக் கோலமாக காட்சி அளித்தது. திமுக நிர்வாகிகள் பலரும் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவுக்கு பிறந்த நாள் தெரிவிக்க தொண்டர்களுடன் அணி அணியாக வருகை தந்து சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதனால், கே.என்.நேரு கட்சி அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் கூட்டம் திரண்டு காணப்பட்டது. அருண் நேரு தன்னை சந்திக்க வந்தவர்களை புன்னகையுடன் வரவேற்று அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதுமட்டுமல்ல, வந்திருந்த அத்தனை பேருக்கும் சுவையான மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவல், முட்டை என 5,000 பேருக்கு மேல் ஒரு பெரிய விருந்து நடைபெற்றது.
இதைவிட பெரிய ஹைலைட்டாக திருச்சி திமுக 6-வது வட்டச் செயலாளர் ஜனா, 40 கிலோ கேக்கை எடுத்துக்கொண்டு வர அருண் நேரு பிறந்தநாளுக்கு முன்தின நாளே தனது பிறந்த நாளை கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடினார். நிர்வாகிகளுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார். அதோடு நிற்காமல், நிர்வாகிகளும் தொண்டர்களும் அருண் நேருவுக்கு 12 கிலோ எடையுள்ள வாள் ஒன்றை பரிசாக அளித்தனர். இப்படி திருச்சியே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு அருண் நேருவின் பிறந்தநாள் கொண்டாட்டம் அமைந்தது.
அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து அவருடைய ஆதரவாளர்கள் கூறுகையில், “எங்கள் அமைச்சரின் மகன் அருண் நேருவின் அரசியல் இன்றிலிருந்து ஜெட் வேகத்தில் தொடங்குகிறது. அமைச்சர் கே.என்.நேருவுக்கு அடுத்து திருச்சியில் திமுகவின் முகம் அருண் நேருதான். அருண் நேரு வரவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயமாக திருச்சியின் மேயர் ஆவார்” என்று தங்கள் விருப்பத்தை மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.
அமைச்சர் கே.என். நேருவுக்கு அடுத்து திருச்சி திமுகவில் அமைச்சர் அன்பில் மகேஷ்தான் ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேரு தனது பிறந்தநாளில் முழு நேர அரசியலில் களம் இறங்கி திருச்சியைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். போகப்போகத்தான் தெரியும் அருண் நேருவின் வளர்ச்சி.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.