திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பொன்னுசங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளிடையே நூலகப் பயன்பாடு மற்றும் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வாசிப்பு இயக்க தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு வாசிப்பு இயக்கத்தினை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, "தமிழகத்திலேயே முதன் முதலாக மாணவர்களிடையே நூலக வாசிப்பு இயக்கத்தை திருச்சி மாவட்டத்தில் தான் தொடங்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகியோர் தங்களது திட்டங்களை முதன் முதலாக தொடங்கியது இன்று வரை நடைமுறையில் உள்ளது. தமிழக முதல்வருக்கு மருத்துவமும் கல்வியும் இரு கண்கள் போன்றது. துறையூர் பகுதிக்கு ஒரு அரசுக் கல்லூரி கொண்டு வரப்படும்" எனத் தெரிவித்தார்.
விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது, மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த எழுத்தாளர்களாக வருவதற்கு அவர்கள் அறிவுத் திறமையை மேம்படுத்துவதற்காக அரசு சார்பில் அவர்களுக்கு 197 வகையான நூல்கள் தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. இதனை படிப்பதினால் அவர்களுக்கு எதிர்காலம் மிகவும் சிறந்ததாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், தியாகராஜன், அரசு அதிகாரிகள், அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள், ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“