/indian-express-tamil/media/media_files/2025/09/01/kodaikanal-entry-fee-at-one-place-to-visit-tourist-places-today-tamil-news-2025-09-01-15-31-04.jpg)
கொடைக்கானல் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு செல்ல இன்று செப்.01 முதல் ஒரே இடத்தில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள் ஆகியவை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு சுற்றுலா இடங்களுக்கும் அந்தந்த இடத்தில் தனியாக நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, இன்று முதல் அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வனத்துறை சுற்றுலா இடம் தொடங்கும் பகுதியான தூண் பாறையில், அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் சேர்த்து சுற்றுலா பயணிகளிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகம் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளில் பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களக்கு ரூ.20, வெளிநாட்டினருக்கு ரூ.1,000 நுழைவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதே போல், உள் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வரும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ.50, பைக்கிற்கு ரூ.20, வெளிநாட்டினர் வரும் கார் மற்றும் வேனுக்கு ரூ.500, பைக்கிற்கு ரூ.100-ஆக நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வனத்துறை சுற்றுலா இடங்களில் தனித்தனியாக டிக்கெட் பெறுவதற்கு பதிலாக ஒரே இடத்தில் டிக்கெட் பெறும் முறை சுற்றுலா பயணிகளுக்கு சுலபமாக இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில் இதை சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கின்றனர்.
செய்தி: க.சண்முக்வடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.