இ பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கோடை சீசன் முழுவதும் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்களை அடைத்து போராட்டத்தை நடத்துவோம் என்று கொடைக்கானல் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மே 7 ஆம் தேதி முதல் கொடைக்கானல் மற்றும் ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதற்கு கொடைக்கானல் வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக ஹோட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
அதில், இ-பாஸ் நடைமுறையால் ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி வைத்திருப்போர் பெரிதும் பாதிப்பு அடையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கருத்து தெரிவிக்கப்பட்டது. சீசனில் தான் வாங்கிய கல்விக்கடன், வங்கிக்கடன் உள்ளிட்ட பிற அனைத்து கடன்களையும் அடைக்க முடியும் என்பதால் முதலமைச்சர் இதில் தலையிட்டு இந்த வழக்கை மேல் முறையீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
மேலும் கார் பார்க்கிங் வசதிகளை மேற்கொள்வது, சீசன் வேளையில் போக்குவரத்து காவலர்களை அதிகப்படுத்துவது, போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மாவட்ட அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ முன்வர வேண்டும். கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரம் கருதி நீதிமன்றம் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து இ-பாஸ் ரத்து செய்ய மனு கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதில் சுமூக உடன்பாடு கிடைக்கவில்லை எனில் அனைத்து தங்கும் விடுதிகளிலும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க மாட்டோம் என்றும், உணவு வழங்க மாட்டோம் என்றும், போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் ஹோட்டல் மற்றும் ரிசார்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“