மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017-ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும் என்று, ஏற்கெனவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் உள்ளிட்டோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்கள்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதி வழங்கியது. மற்றவர்களை விசாரிக்கக் கோரிய மனுவை நீலகிரி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தீபு மற்றும் சதீசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவில் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின் நடந்த கொலை மற்றும் கொள்ளையில், கோடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன அந்த பொருட்கள் என்ன என்பது தொடர்பாக, சசிகலா, இளவரசிக்கும்தான் தெரியும் என்றும் புலன் விசாரணைக் குழு வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளவில்லை என்றும் முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) நடைபெற்றது. அப்போது மனுதாரரின் வாதத்தை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியை சாட்சியாக ஏன் விசாரிக்கக் கூடாது என கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை எதிர்த்தரப்பு சாட்சிகளாக விசாரிக்க அனுமதிக்க கோரிய வழக்கில், விரைவில் நீதிபதி உத்த்ரவு பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“