கொடநாடு விவகாரத்தில் அவதூறு செய்தி வெளியிட்டதாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு முதல்வர் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு ஜூன் 10 வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் ஆகியோர் அளித்த பேட்டியின் அடிப்படையில், கொடநாடு சம்பவத்தில் முதல்வரை தொடர்புபடுத்தி தெஹல்கா முன்னாள் ஆசிரியர் சாமுவேல் ஆவணப்படம் ஒன்றை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டார்.
இந்த ஆவணப்படம் மூலமாக தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் உள் நோக்கத்தோடு, பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியிட்டுள்ளதாக கூறி, மாத்யூ சாமுவேல், சயன், மனோஜ் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில், மாத்யூ சாமுவேல், சயன், மனோஜ் உள்ளிட்ட 7 பேர் முதலமைச்சரை பற்றி பேசவும், எழுதவும் நீதிமன்றம் தடை விதித்ததோடு, 7 பேரும் மனு தொடர்பாக பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஆர். சுப்ரமணியன் முன் விசாரணைக்கு வந்த போது, மேத்யூ சாமுவேல் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார்.
இதை ஏற்று நீதிபதி ஜூன் மாதம் 10 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய மேத்யூ சாமுவேலுக்கு அவகாசம் வழங்கி, முதல்வரை பற்றி பேசவும்,எழுதவும் ஏற்கனவே விதித்த தடையை நீட்டித்தும் உத்தரவிட்டார்.