மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் பணியில் இருந்த காவலாளி கொலை மற்றும் அங்கு நடைபெற்ற கொள்ளை வழக்கில் கைதான கேரளாவை சேர்ந்த சயான் மீது, வேகமாக கார் ஓட்டி சென்று டிப்பர் லாரியில் (அவரது மனைவி, குழந்தை பலியானார்கள்) மோதியது தொடர்பான வழக்கு, ஊட்டியை சேர்ந்த சாந்தா என்பவரை மிரட்டியது, ஹெகல்கா ஆசிரியரின் ஆவணப்படத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி குறித்து அவதூறாக பேசியது தொடர்பான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதுபோன்ற தொடர் குற்றங்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக செயல்களில் ஈடுபட்டு பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு எதிராக செயல்பட்டு வருவதாக கூறி, தற்போது கோவை மத்திய சிறையில் உள்ள சயானை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் கடந்த மார்ச் 21ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சயான் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், விபத்தில் மனைவியையும், பிள்ளையையும் பறிகொடுத்த சம்பவத்தை தன் மீதான குற்ற வழக்குகளுடன் தொடர்புபடுத்தியிருப்பதாகவும், கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசாமல் தடுபதற்காகவே தன்னை குண்டர் சட்டத்தில் அடைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் 409 பக்கங்களில் தமிழில் ஆவணங்கள் கொண்ட குண்டர் சட்ட கைது உத்தரவை தமிழ் தெரியாத தனக்கு படித்துக் காட்டியதாகவும், என்னுடைய தாய் மொழி மலையாளத்தில் ஆவணங்கள் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இவற்றின் அடிப்படையில் தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, குண்டர் சட்டத்தில் அடைத்த போது ஆவணங்களை மலையாளத்தில் வழங்காத போதும், முறையாக அதனை படித்துக் காட்டவில்லை என்று கூறி, சயானுக்கு எதிராக நீலகிரி மாவட்ட ஆட்சியர் கடந்த மார்ச் 21 ஆம் தேதி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தனர்.