kodanad heist murder case time line : ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி அன்று சட்டமன்றத்தில், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். கொடநாடு கொலை வழக்கு உள்ளிட்ட மர்மங்களுக்கு தீர்வு காணப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். எதையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று கூறும் அதிமுக அன்று சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது. மேலும் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆளுநரை சந்தித்து திமுக அரசு குறித்து புகார் அளித்தது.
தமிழகத்தில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்ற போது இதைப் பற்றி ஏன் சட்டமன்றத்தில் பேச வேண்டும். நீதிமன்ற விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கு குறித்து முதல்வர் பேரவையில் குறிப்பிடுவது முறையாகாது என்று அஇஅதிமுக உறுப்பினர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் திங்கள் கிழமை அன்று கொடநாடு விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தது காங்கிரஸ்.
கொடநாடு எஸ்டேட்
கிரேக் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயருக்கு சொந்தமானது தான் இந்த கொடநாடு எஸ்டேட். 1974-75 காலத்தில் இந்த 1000 ஏக்கர் எஸ்டேட்டை வாங்கினார் கிரேக் ஜோன்ஸ். அவருக்கு இருந்த கடன் சுமைகளை குறைக்கும் பொருட்டு எஸ்டேட்டின் சில பகுதிகள் விற்பனை செய்யப்பட்டது. மீதம் உள்ள 900 ஏக்கர் நிலப்பரப்பை 90களில் விற்க முயற்சி மேற்கொண்டார் அவர். ஆரம்ப காலம் முதலே அரசியல்வாதிகளுக்கு இந்த நிலத்தை விற்பனை செய்யக் கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார் அவர்.
சசிகலா தரப்பினருக்கு இந்த இடம் பிடித்து போகவே ராமசாமி உடையார் உதவியுடன் இந்த நிலம் மிகவும் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டது என்று ஜெயலலிதா மறைந்த பிறகு கிரேக் ஜோன்ஸின் மகன் பீட்டர் செய்தி தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தார். இன்னும் இந்நிலத்திற்கான நிலுவைத் தொகை செலுத்தப்படவில்லை. சட்டரீதியாக இதனை எதிர்கொண்டு தொகையைப் பெறுவோம் என்று அவர் கூறினார்.
94 சமயங்களில் இந்த நிலம் வாங்கப்பட்டிருந்தாலும் உள்ளே கட்டப்பட்ட கட்டிடங்கள், சொகுசு பங்களாக்கள் மற்றும் ஏரி போன்றவை பின்னாட்களிலேயே வெளிச்சத்திற்கு வந்தது. இந்த சொத்தின் பங்குதாரர்களாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் உள்ளனர்.
ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது தலைமை செயலாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுடனும் கூட்டம் நடத்துதல், தேர்தல் நடவடிக்கைகள், தொகுதிப் பங்கீடு குறித்து பல ஆலோசனைக் கூட்டங்கள் இங்கு தான் நடைபெறும். 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த எஸ்டேட்டிற்கு வந்து சென்றார்.
2016, டிசம்பர் – உடல் நலக்குறைவால் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செல்வி ஜெயலலிதா மரணம் அடைந்தார். 2017, பிப்ரவரி 15- சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
கொடநாட்டில் ஜெயலலிதா: அந்த நாட்கள் எப்படி இருந்தது? மனம் திறக்கும் உள்ளூர் மக்கள்
கொலைகளும் மர்மங்களும்
ஏப்ரல் 24, 2017
கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் எஸ்டேட்டின் பிரதான வாயிலில், கேட் எண் 10ல் காவலாளியாக பணியாற்றிய ஓம் பகதூர் என்பவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டார். அவருடன் பணியாற்றிய கிர்ஷ்ண பகதூர் காயங்களுடன் மயக்கம் அடைந்த நிலையில் இருந்தார்.
ஜெயலலிதா மற்றும் சசிகலா அறைகளில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்து உயர் ரக கைக்கடிகாரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை திருடியதாக தகவல்கள் வெளியானது.
ஏப்ரல் 27, 2017
கொலை நடைபெற்ற மூன்று நாட்கள் கழித்து கேரளாவை சேர்ந்த சயன் என்பவரை காவல்துறை தேட ஆரம்பித்தது.
ஏப்ரல் 29, 2017
கொடநாடு கொலை வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் சேலம் ஆத்தூர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் பலியானார். சயான் பாலக்காட்டில் தன்னுடைய மனைவி வினுப்ரியா மற்றும் ஐந்து வயது மகள் நீலி ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்த போது டேங்கர் லாரி மோதி அவர் படுகாயம் அடைந்தார். மனைவி மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதே வழக்கில் பிறகு வாளையாறு மனோஜ் சாமி, டீபு, ஜித்தன் ஜாய், ஜம்ஷோர் அலி, உதயகுமார், சந்தோஷ் சாமி, சதீஷன் மற்றும் பிஜின் குட்டி ஆகியோரும் கைது செய்யப்பட்டு வாளையாறு மனோஜ் தவிர மீதம் உள்ள நபர்களுக்கு நிபந்தனை ஜாமீனும் வழங்கப்பட்டது.
ஜூன் 3, 2017
கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்ற போது சி.சி.டி.வி காட்சிகள் ஏதும் ஏன் பதிவாகவில்லை என்ற குழப்பம் நிலவியது. இரண்டு மாதங்கள் கழித்து கொடநாடு எஸ்டேட்டின் கணினி பிரிவில் பணியாற்றிய 24 வயது இளைஞரான தினேஷ் குமார் வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 2017ம் ஆண்டில் இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது காவல்துறை.
ஜனவரி 11, 2019
கொடநாடு விவகாரம் தொடர்பாக 16 நிமிடங்கள் ஓடும் ஆவணப்படத்தை டெல்லி செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார் தெஹல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல். பிறகு இதில் கைது செய்யப்பட்ட சயன் மற்றும் மனோஜ் ஆகியோரும் பேசினார்கள்.
ஜூலை 7, 2021
ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கும் சயனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும். ஏற்கனவே கீழ் நீதிமன்றங்களில் விசாரணை துவங்கப்பட்டுவிட்டது. கைது செய்யப்பட்ட இதர 8 பேருக்கும் ஜாமீன் வழங்கியதால் இவருக்கும் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சயன் சார்பில் வாதாடப்பட்ட நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி ஆர். சுப்பிரமணியம் சயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
ஆகஸ்ட் 13, 2021
சயனிடம் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்று ஊட்டி நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆகஸ்ட் 16, 2021
சயன் மற்றும் மனோஜூக்கு சமீபத்தில் நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம். உதகையிலேயே தங்கி தினமும் இருவரும் நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், சயன் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று ஊட்டி நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியது.
ஆகஸ்ட் 17, 2021
இதனை அடுத்து ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி அன்று சயனிடம், கோத்தகிரி காவல் நிலையத்தில் மாலை 03:30 மணி முதல் 06:30 மணி வரையில் விசாரணை மேற்கொண்டார் உதகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷித் ராவத்.
ஆகஸ்ட் 18, 2021
சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அதிமுகவினர் கூறுகின்றனர். கொடநாடு விவகாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு காணப்படும் என்று கூறினார்.
ஆகஸ்ட் 19,2021
தேர்தல் அறிக்கைக்கும் கொடநாடு கொலை வழக்கிற்கும் என்ன சம்பந்தம்? விசாரணையில் இருக்கும் வழக்கைத் தேர்தல் வாக்குறுதியாக எப்படி கொடுப்பார்? சயனுக்கு ஆதரவாக தி.மு.க வழக்கறிஞர்கள் வாதாடுகின்றனர் என்று ஆளுநர் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
27ம் தேதி தீர்ப்பு
கொடநாடு எஸ்டேட்டின் பங்குதாரராக இருக்கும் சசிகலா இன்னும் விசாரிக்கப்படவில்லை எனவே மேல் விசாரணைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்ட நிலையில் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் வருகின்ற 27ம் தேதி அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் தீர்ப்பு வழங்க உள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil