kodanad issue Madras high court restrains MK stalin : கோடநாடு விவகாரம் தொடர்பான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்தது பேசினால் தடை நீக்கப்படும் என்றும், விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்ட வீடியோ குறித்து, திமுக தலைவர் ஸ்டாலின், கடந்த ஜனவரி 13 ஆம் தேதி நிருபர்களுக்கு பேட்டியளித்திருந்தார்.
அவர் தெரிவித்த கருத்துக்கள், முதல்வரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக கூறி, முதல்வர் சார்பில் அரசு வழக்கறிஞர், மு.க. ஸ்டாலினுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரி ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று மீண்டும் உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன் ஆஜராகி, கோடநாடு கொலை கொள்ளை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்திப் பேசுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஸ்டாலின் ஒவ்வொரு கூட்டங்களிலும் அதுகுறித்து பேசுவதாகவும் இது நீதிமன்ற நடவடிக்கைகளில் அவர் தலையிடுவது போல் இருப்பதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கபட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
முக ஸ்டாலினுக்கு எச்சரிக்கை
அப்பொழுது திமுக தலைவர் ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரேசன், அவதூறு வழக்கு பதிவு செய்வதற்கு அரசு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு அதிகாரம் இல்லை என்ற அடிப்படையிலேயே தாங்கள் வழக்கு தொடர்ந்து முதன்மை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் பாபு முருகவேல் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அவர்களுக்குரிய நிவாரணம் கிடைக்காததால் இந்த வழக்கின் மூலம் நிவாரணம் தேட அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். அப்போது குறுக்கிட்டு நீதிபதி அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை பெற்றுள்ள நீங்கள் அதே கருத்தை தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் பேசுவது ஏன் என கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உரிய அறிவுரை வழங்கும்படி தெரிவித்தார். ஒருவேளை அந்த கருத்துக்களை தான் தொடர்ந்து பேசுவீர்கள் என்றால் அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாகவும், சென்னை அமர்வு நீதிமன்றம் விசாரணை எதிர் கொள்ளுங்கள் என்றும் எச்சரித்த நீதிபதி அவதூறு வழக்கு விசாரானையை எதிர்கொள்ள என்ன தயக்கம் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் தொடர்ந்த வழக்கு தொடர்பான உத்தரவையும், அவதூறு வழக்கு தொடர்வதற்கு அரசு குற்றவியல் வழக்கறிஞர் அதிகாரம் உள்ளதா? என்பது தொடர்பான விதிமுறைகளையும் ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறும் திமுக பொதுக் கூட்டம் மற்றும் இதுவரை ஸ்டாலின் பேசிய வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டு பின்னர் வழக்கின் விசாரணையை ஏப்ரல் 8 ஆம் தேதி நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.