கோடநாடு விவகாரம் : கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கில் ஜாமீன் ரத்து செய்த நீலகிரி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனோஜ், சயான் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு கொலை கொள்ளை சம்பவங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக தெஹல்கா இணையத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் கடந்த ஜனவரி மாதம் ஆவணப்படம் வெளியிட்டிருந்தார்.
கோடநாடு விவகாரம் - வழக்கு தொடர்ந்த மனோஜ் மற்றும் சயன்
கோடநாடு சம்பவங்களில் தொடர்புடையதாக கூறப்படும் மனோஜ், சயான் ஆகியோர் முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக அந்த ஆவணப்படத்தில் பேசியிருந்தனர்.
இதுதொடர்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் அளித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மாத்யூ சாமுவேல், சயான், மனோஜ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. இதை ரத்து செய்யக்கோரி மேத்யூ சாமுவேல் தொடர்ந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மனோஜ், சயான் ஆகியோர் கொலை வழக்கில் ஜாமின் பெற்று வெளியில் இருப்பதால் முதல்வருக்கு எதிராகவும், தேர்தல் நேரத்தை கருத்தில் கொண்டும் பேட்டியளிப்பதலும், ஜாமீன் நிபந்தனைகளை மீறி அவர்கள் செயல்படுவதால் இருவரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென உதகை நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்த மனுவை ஏற்ற நீதிமன்றம், இருவரின் ஜாமீனையும் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் ஜாமீனை ரத்து செய்த உதகை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி சயான், மனோஜ் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் கடந்த 25 ஆம் தேதி இறுதவி சாரணைக்கு வந்த்து. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வீடியோ வெளியிட்டது தொடர்பான மத்திய குற்றப்பிரிவு வழக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக ஒப்புதல் வாக்குமூலமே அளிக்க தயாராக இருப்பதாக வாதிட்டார்.
மேலும், கோடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களுக்கும், மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கிற்கும் தொடர்பில்லை என்ற பொய்யான தகவலை சொல்லியே உதகை நீதிமன்றத்தில் ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை மனுத்தாக்கல் செய்ததாக குற்றம் சாட்டினார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன், இவர்கள் இருவர் மீதும் பல வழக்குகள் கேரள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, இந்த வீடியோவை வெளியிட்டு பிளாக்மெயில் செய்யவும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை நீர்த்துபோக செய்ய இருவரும் முயற்சிப்பதாக தெரிவித்தார்.
கோடநாடு விவகாரம் - தள்ளுபடி செய்த நீதிமன்றம்
இந்த செயல் ஜாமீன் நிபந்தனைகளுக்கு எதிரானது. இருவரும் பேசுவது நீதித்துறை நிர்வாகத்தில் குறுக்கீடு செய்வதாலேயே ஜாமீன் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன் ஜாமீனை ரத்து செய்த நீலகிரி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்வதற்காக உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.