கொடநாடு என்னும் மர்மதேசம்!

கொடநாடு எஸ்டேட்டும் பங்களாவும் கோட்டைபோல் பாதுகாக்கப்பட்டுவந்தன.

கண்ணன்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அடிக்கடி செய்திகளில் இடம்பெற்ற கொடநாடு தற்போது அவரது மறைவுக்குப் பின் மீண்டும் தமிழகத்தின் முக்கியச் செய்திகளில் இடம்பெறுகிறது. இந்த முறை கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களுக்காக அந்த இடத்தின் பெயர் ஊடகங்களில் இடம்பெறுகிறது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. 2006-11 காலகட்டத்தில் எதிர்க் கட்சித் தலைவியாக இருந்தபோது அங்கு அடிக்கடி சென்று ஓய்வெடுக்கத் தொடங்கினார் ஜெயலலிதா. அதேபோல் 2011-16ல் அதிமுக ஆட்சி செய்துகொண்டிருந்தபோதும் அடிக்கடி அங்கு சென்று தங்கி கொடநாட்டிலிருந்தபடியே அலுவல்களை கவனித்துவந்தார்.

அவரிடம் கையெழுத்து பெறுவதற்காக அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோர் ஒவ்வொரு முறையும் கொடநாட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. அதற்கான போக்குவரத்து மற்றும் இதர வசதிகளுக்கு அரசுப் பணம் வீணடிக்கப்படுவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவந்தன.

ஜெயலலிதா மறைந்து நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், கொடநாட்டில் அவர் தங்கியிருந்த பிரம்மாண்ட பங்களாவின் 10-வது நுழைவுவாயிலில் ஏப்ரல் 24-ம் தேதி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி ஓம்பகதூர் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.  மேலும் பங்களாவிலிருந்த விலையுயர்ந்த பொருட்கள் சிலவும் கொள்ளையடிக்கப்பட்டு இப்போது போலீசாரால் மீட்கப்பட்டிருக்கின்றன.

கொடநாடு எஸ்டேட்டும் பங்களாவும் கோட்டைபோல் பாதுகாக்கப்பட்டுவந்தன. அந்த இடத்தில் ஒரு கொலை நடந்திருப்பது ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளிதான் என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அவர் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகைக்கு ஈடாக அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது. அதில் கொடநாடு எஸ்டேட்டும் அடக்கம். இந்தக் கொலையில் சில ஆளும் கட்சிக்கு அமைச்சர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழத் தொடங்கியதை அடுத்து காவல் துறையினர் விசாரணை சற்று தீவிரத்துடன் முடுக்கிவிடப்பட்டது.

இந்தக் கொலையில் சந்தேகத்துக்குரிய நபர்களாக அடையாளம் காணப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் வாகன ஓட்டுனர் கனகராஜ் என்பவர் கடந்த சனிக்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்தார். இது கொலையாக இருக்கலாம் என்று பரவலாக சந்தேகிக்கப்பட்டது. அதே நாளில் போலீசாரால் தேடப்பட்ட மற்றொருவரான சயன் என்பவரும் சாலை விபத்தில் சிக்கினார். ஆனால் அந்த விபத்தில் அவர் உயிர் தப்பிவிட்டார். அவரது மனைவியும் மகளும் உயிரிழந்திருக்கின்றனர்.

ஒருக்ரைம் த்ரில்லர்” கதைக்கு இணையாக மிக அதிர்ச்சிகரமான திருப்பங்கள் அரங்கேறிவரும் இந்த கொடநாடு கொலை விவகாரத்தில் தற்போது காவல்துறை ஆறு பேரைக் கைது செய்துள்ளது. மேலும் ஜெயலலிதா வீட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்கக் கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அநேகமாக இந்தக் கொள்ளையர்கள், கொலை செய்தவர்கள் தண்டிக்கப்படுவதுடன் இந்த வழக்கு மூடிவிடப்படும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.

ஆனால் மக்கள் இவற்றை ஏதோ சில கொள்ளையர்களின் சதிவேலை என்று ஏற்றுக்கொண்டு அவ்வளவு எளிதாக அமைதியாகிவிடுவார்கள் என்று தோன்றவில்லை. ஜெயலலிதாவின் உடல் நிலை, அவரது மரணம் ஆகியவை தொடர்பில் அவரைப் பார்த்துக்கொண்டவர்கள் காத்த பரம ரகசியம் இன்று அவர் கொலைசெயப்ப்பட்டிருக்கலாம் என்று மக்களில் பலர் சந்தேகிக்கும் நிலையை உருவாக்கியிருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் மு..ஸ்டாலின் மட்டுமல்லாமல்  அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற .பன்னீர்செல்வம் தரப்பினர் ஜெயலலிதாவின் மரணம் மீதான அரசு விசாரணையை வலியுறுத்தி வருகின்றனர்.  இப்போது தமிழகத்தில் நிலையான ஆட்சி நடக்கவில்லை என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் ஊடுருவியுள்ளது.

இந்நிலையில் அவரது கோட்டையாக இருந்த கொடநாட்டில் கொள்ளையும் மர்ம மரணங்களும் நடந்திருப்பது அதிமுகவின் பெருந்தலைகள் பற்றிய மக்களின் சந்தேகங்களுக்கு மேலும் தீனிபோட்டிருப்பதாகவே அமைந்திருக்கிறது.

×Close
×Close