Advertisment

கொடநாட்டில் ஜெயலலிதா: அந்த நாட்கள் எப்படி இருந்தது? மனம் திறக்கும் உள்ளூர் மக்கள்

தொழிலாளர்கள் மத்தியில் ஒரு முகம்; உள்ளூர்வாசிகள் மத்தியில் ஒரு முகம்... கொடநாட்டில் ஜெவின் நாட்கள் எப்படியானது? விவரிக்கிறது இந்த சிறப்பு தொகுப்பு

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
kodanad issues, jeyalalitha, sasikala

கொடநாடு எஸ்டேட் தொழிலாளர்களுடன் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா & சசிகலா

kodanadu issue : எண்ணிலடங்கா கேள்விகள், எண்ணற்ற மர்மமங்கள், விடை தெரியாத வினாக்கள்... தீர்வுகளே காணப்படாத பிரச்சனைகளுக்கு அர்த்தமாக மாறிவிட்டது ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டும் சொகுசு பங்களாவும்

Advertisment

கொடநாடு கொலை - இதுவரை நடந்தது என்ன?

மாயாறு நதி பாயும் பள்ளத்தாக்கும், அழகிய காட்சி முனையும், சில்லென்று வீசும் காற்றும், நீலகிரிக்கே உரித்தான காலநிலையும் கொடநாட்டை ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த ஒரு இடமாக மாற்றியது. 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி அன்று ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அஇஅதிமுகவுக்குள் நிலவிய அதே பதற்றம், ஜெயலலிதா வாழ்ந்த இடங்களிலும் நிலவியது. போயஸ் தோட்டம் ஒரு பக்கம், நீலகிரியின் கொடநாடு மறுபக்கம் என்று தினசரி நாளிதழ்களில் செய்தி மேல் செய்திகளாக பல விவகாரங்கள் இது தொடர்பாக பேசப்பட்டது.

publive-image

மர்ம மரணம்

“கொடநாட்டில் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி அன்று மின்சாரம் தடை ஏற்பட்டது. வழக்கமாக ரோந்து பணிக்கு வரும் காவலர்கள் அன்று வரவில்லை. அப்போது உள்ளே புகுந்த மர்ம நபர்கள் காவலாளி ஓம் பகதூரை கொன்றுவிட்டு உள்ளே இருந்த சில ஆவணங்களை திருடிச் சென்றனர். இதனை தடுக்க வந்த கிருஷ்ணா பகதூர் தாக்கப்பட்டார். பின்னாட்களில் அவர் உடனடியாக நேபாளத்திற்கு அனுப்பியும் வைக்கப்பட்டார்” என்ற கோர்வையில் பல மர்மமான சம்பவங்கள் அந்த இரவில் நடைபெற்றாலும், கொலை மற்றும் கொள்ளைக்கான முகாந்திரம் என்ன என்பது விடை தெரியாத வினாவாகவே உள்ளது.

இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவராக கருதப்பட்ட ஜெயலலிதாவின் ஓட்டுநராக இருந்த கனகராஜ் சேலம் அருகே, ஆத்தூர் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலியானார். முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சயன், கேரள மாநிலம் பாலக்காடு அருகே காரில் சென்ற போது, டேங்கர் லாரி மோதி விபத்தில் சிக்கினார். அதில் அவருடைய மனைவி வினுப்ரியா, மகள் நீலி பரிதாபமாக உயிரிழந்தனர். இதே வழக்கில் வாளையாறு மனோஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இரண்டு மாதங்கள் கழித்து கொடநாடு எஸ்டேட்டில் கணினி பிரிவில் பணியாற்றிய தினேஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.

கொடநாடு மர்மங்கள் தொடர்பாக பல்வேறு முக்கிய விபரங்களை வெளிக் கொண்டு வந்தார் பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேல். ஆனால் அவர் மீதும் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. பல முக்கிய சாட்சியங்கள் விசாரிக்கப்படாமலே இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்று திமுகவினர் பலரும் குற்றம் சாட்டினார்கள்.

கொடநாடு விவகாரம் : எஸ்டேட் முதல் கொலை வழக்கு வரை… நடந்தது என்ன?

கொடநாடு விவகாரம் இப்போது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

கடந்த வாரம், திமுக தேர்தல் அறிக்கையாக அறிவித்த கொடநாடு மர்மங்களையும் முடிவுக்கு கொண்டு வருவோமென்று சட்டமன்றத்தில் முதல்வர் முக ஸ்டாலின் பேசினார். எப்போதும் சட்ட ரீதியாக இதனைசந்திப்போம் என்று கூறி வந்த அஇஅதிமுக தரப்பு பரபரப்புடன் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியது. ஓ.பி.எஸ். - இ.பி.எஸ், 19ம் தேதி அன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சென்று சந்தித்து திமுக அரசு மீது புகார் அளித்தனர். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், தேர்தல் அறிக்கையாக இதையெல்லாமா கூறுவார்கள்? மேலும் இந்த விவகாரத்தில் என்னை சிக்க வைக்க முயற்சி செய்கிறார் முதல்வர் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

இந்த வழக்கு தொடர்பாக மறுவிசாரணை நடத்தப்பட வேண்டுமென்று திமுக சார்பில் உதகை நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் துவங்கி, மரணங்கள், தற்கொலை என்று நீடித்த கொடநாடு மர்மம் ஒரு பக்கம் இருக்க, கொடநாடு எவ்வாறு ஜெயலலிதாவின் இரண்டாம் வீடாக மாறியது, அங்குள்ள மக்களுக்கும் ஜெயலலிதாவிற்கும் இடையே இருந்த உறவு எத்தகையதாக இருந்தது? ஜெயலலிதாவின் மரணத்திற்கு முன்பும் பிறகும் எஸ்டேட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன என்பதை அங்கே பணியாற்றிய முன்னாள் ஊழியர்களிடமும், உள்ளூர் அரசியல் பிரமுகர்களிடமும் கேட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்.

Kodanad heist cum murder timeline
புகைப்படம் - சிறப்பு ஏற்பாடு

கிராமசபை கூட்டத்தையே நடத்தவிடவில்லை - நீலகிரி ஊராட்சி தலைவர்

எஸ்டேட் உள்ளே பங்களா கட்டியது, ஏரியை உருவாக்கியது என எதுவும் எங்களுக்கு ஆரம்பத்தில் தெரியவில்லை. 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நாங்கள் கிராமசபை கூட்டம் போட காமராஜர் நகருக்கு செல்ல முயற்சி மேற்கொண்டோம். ஆனால் ஜெயலலிதா வந்திருப்பதால் உள்ளே அனுமதிமக்கமாட்டோம் என்று எங்களுக்கு அனுமதி மறுத்துவிட்டனர் என்று நம்மிடம் கூறினார் அப்போது கொடநாடு பஞ்சாயத்து தலைவராக பணியாற்றிய பொன்தோஸ்,

“அன்றே அந்த குடியிருப்பில் இருந்த மக்களுடன் சேர்ந்து பஞ்சாயத்து அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டோம். சில நாட்களில் விவகாரம் அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு தெரிந்த பிறகு எங்களை நேரில் அழைத்து பிரச்சனை குறித்து பேசினார். நாங்கள் நடந்த அனைத்தையும் கூறிய பிறகு சட்ட ரீதியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறினார். வருவாய்த்துறை அதிகாரிகள் துவங்கி, மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று மிகப்பெரிய சட்ட ரீதியான போராட்டமாக மாறியது பொதுசாலைக்கான அணுகல் பிரச்சனை. பொதுமக்களுக்கு அந்த கதவுகள் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும். பிரச்சனை ஏதேனும் ஏற்பட்டால் காவல்துறையின் உதவியை நாட வேண்டும் என்று எஸ்டேட் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.

publive-image
நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ்

ஆனால் ஆட்சி மாறிய பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அந்த வழி என்பது பகல் கனவாக போய்விட்டது. இந்த ஆட்சியில் இதற்கு நிச்சயம் ஒரு தீர்வு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். முதல்வருக்கும் இந்த விவகாரம் குறித்து நன்றாகவே தெரியும் என்று கூறினார்” பொன்தோஸ்.

பொன்தோஸ் தற்போது நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவராக பணியாற்றி வருகிறார். மேல் விசாரணை பற்றி கேட்ட போது, “நிச்சயமாக இந்த வழக்கில், கொடநாடு பங்களா கட்டும் போது தச்சு வேலைக்கு வந்த கேரளாவை சேர்ந்த மர வியாபாரி சஜீவனையும் விசாரிக்க வேண்டும். அவருடன் தான் சயன், மனோஜ் பணியாற்றினார்கள். தன்னுடைய சொந்த கட்சி உறுப்பினர்களே கூடலூரில் போராட்டம் நடத்திய பிறகும் சஜீவனுக்கு அஇஅதிமுகவில் மாநில வர்த்தகர் அணி அமைப்பாளர் பொறுப்பு தர வேண்டிய அவசியம் ஏன் எடப்பாடியாருக்கு ஏற்பட்டது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கொடநாட்டில் ஜெயலலிதா - அண்ணா நகர், காமராஜர் நகர் மக்களின் கருத்து என்ன?

பிரதான சாலையில் இருந்து எங்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல குறைந்தது நான்கு கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். இன்று நேற்றல்ல, 1994ல் இந்த உடமை ஜெயலலிதாவின் கைகளுக்கு எப்போது சென்றதோ அப்போது இருந்தே பிரச்சனை தான். 1வது முதல் 5வது வரை படிக்கும் குழந்தைகளுக்கு பள்ளி செல்ல இலவச போக்குவரத்து மட்டும் தான் இங்கே தருகிறார்கள். ஜெயலலிதா இங்கே வந்துவிட்டால் அதிகாரிகள் பெரும் கூட்டமாக இங்கே வந்துவிடுவார்கள். ஒரு அவரச தேவைக்கு வெளியே செல்ல வேண்டும் என்றாலும் கூட பலருக்கும் பதில் சொல்ல வேண்டும் என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் தம்பு என்ற ஆனந்த குமார் (44). கொடநாடு எஸ்டேட்டின் உள்ளே அமைந்திருக்கும் அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் அவர் வசித்து வருகிறார்.

publive-image
அண்ணா நகர் குடியிருப்பு பகுதி - புகைப்படம் சிறப்பு ஏற்பாடு

“இந்த சாலைகளில் செல்லக் கூடாது என்று முதலில் மறுப்பு தெரிவித்தார்கள். நாங்கள் ஆசையாய் இருசக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ வாங்கினால் கூட அதனை எங்களின் வீடு வரை எடுத்த செல்ல முடியாது. நான்கு கிலோ மீட்டர் நடந்து வர வேண்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். யானை, புலிகள், கரடிகள் சர்வசாதாரணமாய் உலா வரும் பகுதி இது. 120 குடும்பங்கள் இங்கே இருக்கிறது. 600க்கும் மேற்பட்டோர் இங்கே வசித்து வருகிறோம். வெளியே செல்ல வேண்டும் என்றால், ஃப்லீட் ஆஃபிசருக்கு கடிதம் தர வேண்டும். அவர் நிர்வாகத்திடம் அதனை காட்டி எங்களுக்கு பாஸ் வாங்கித் தருவார். பிறகு தான் வெளியே செல்ல முடியும்.

கடந்த நான்கைந்து மாதங்களாக தான் எங்களுடைய உடமைகள் ஏதும் சோதனைக்கு ஆளாக்கப்படவில்லை. எங்கே செல்கிறோம், யாரைப் பார்க்க போகின்றோம், என்ன கையில் எடுத்துச் செல்கிறோம் என்று அனைத்தையும் சோதனை செய்து தான் அனுப்புவார்கள். சாலைக்கான அணுகல் மறுக்கப்பட்ட போது போராட்டத்தில் இறங்கினோம். எங்கள் மீது தாக்குதல்கள் நடத்தினார்கள். என்னுடைய அம்மாவிற்கு தலையில் பலத்த காயம். ஜெயலலிதா, அவருடைய எஸ்டேட்டில் பணியாற்றியவர்களிடம் மட்டும் தான் ஆதரவாக இருந்தார். ஒரு நாளிலும் இந்த பகுதிக்கு அவர் வந்ததே இல்லை” என்றார் தம்பு.

publive-image
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மறுக்கப்பட்ட சாலை ; புகைப்படம் - சிறப்பு ஏற்பாடு

கொடநாடு எஸ்டேட் வரலாறு

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இருந்தே பலரின் கைகளுக்கு மாறிய கொடநாடு எஸ்டேட் கிரேக் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேரின் குடும்ப சொத்தாக இருந்தது. ஆனால் அவரிடம் இருந்து வலுக்கட்டாயமாக இந்த 906 ஏக்கர் நிலம் ரூ. 7 கோடிக்கு வாங்கப்பட்டதாக கூறப்பட்டது. 2017ம் ஆண்டு ஊடகங்களில் பேசிய அவருடைய மகன் பீட்டர் ஜோன்ஸ், மிகவும் குறைவான விலைக்கு வலுக்கட்டாயமாக இதனை விற்பனை செய்ய நேர்ந்தது. மேலும் ரூ. 5 கோடி வரை பாக்கி பணம் செலுத்தப்படவே இல்லை என்றும் கூறினார். இந்த எஸ்டேட்டின் உரிமையாளர்களாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் உள்ளனர்.

கொடநாடு எஸ்டேட்டினை பீட்டரின் தந்தை ரூ. 33 லட்சத்திற்கு 1975ம் ஆண்டு வாங்கியுள்ளார். 1000 ஏக்கருக்கு மேல் இருந்த அந்த நிலத்தில் சில காரணங்களுக்காக சில ஏக்கர் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டது. கடனை அடைக்க மொத்த எஸ்டேட்டையும் விற்கும் எண்ணத்தில் இருந்த ஜோன்ஸ் அரசியல்வாதிகளுக்கு தன்னுடைய நிலத்தை விற்கவே கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். அதனால் ராமசாமி உடையார் என்பவரின் உதவியோடு இந்த நிலம் சசிகலாவின் கைகளுக்கு வந்தது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

94-ல் நிலம் வாங்கி இருந்தாலும் கூட, உள்ளே பங்களா கட்டுவது போன்ற பணிகள் நடப்பது வெளியே யாருக்கும் தெரியவில்லை. 2006 சமயங்களில் தான் இது குறித்து தகவல்கள் வெளியானது. கொடநாடு மலைகளில் உருவாகும் ஓடை, சீகூர் பள்ளத்தாக்கை தாண்டி மாயாற்றில் கலக்கும். ஆனால் ஜெயலலிதாவின் இந்த எஸ்டேட்டில் பல பாலங்களையும் தடுப்பணைகளையும் கட்டி படகு சவாரி செய்ய ஒரு ஏரியே உருவாக்கப்பட்டது. இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டது.

publive-image
கொடநாடு மலைகளில் உருவாகி மாயாற்றில் கலக்க வேண்டிய நீரோடையை தடுப்பணைகள் கொண்டு மறைத்து கொடநாட்டில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை ஏரி புகைப்படம் - சிறப்பு ஏற்பாடு

எஸ்டேட் மக்கள் இதனை எப்படி பார்த்தார்கள்?

2005 முதல் 2010ம் ஆண்டு வரை ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு வாகன ஓட்டுநராக பணியாற்றிய திவாகரனிடம் பேசிய போது, “மிகவும் சாந்தமான மனநிலையில் தான் ஜெயலலிதா இருப்பார். யாரையும் அதிர்ந்தும் பேசவோ திட்டவோமாட்டார். காரில் சென்று எஸ்டேட்டை சுற்றிப் பார்க்கும் போது அங்கே பணியாற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் மனம் திறந்து பேசுவார். அவர்களின் குறைகள் என்ன என்பதை கேட்டு உடனே அதனை நிவர்த்தி செய்வார்” என்று கூறினார்.

எஸ்டேட் நிர்வாகத்திடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அங்கிருந்து விலகிய திவாகரை தான், எஸ்டேட்டில் கொலை நடந்த போது காவல்துறையினர் முதலில் கைது செய்துள்ளனர். பிறகு ”சயன் மற்றும் மனோஜ் தான் குற்றவாளிகள் என்று அறிந்த பிறகு குன்னூரில் இருந்து காவல்துறையினர் விடுவித்தனர்” என்று கூறினார் திவாகரன். ஆரம்ப காலம் முதலே நாங்கள் கொடநாட்டில் தான் வசித்து வருகின்றோம். 10 மற்றும் 11வது நுழைவாயில் வழியே அவர் பங்களாவிற்கு வருவார்.

அண்ணாநகர், காமராஜர் பகுதி மக்களுக்கு சாலை பயன்பாடு மறுக்கப்பட்ட பிறகு, குழந்தைகள் பள்ளி செல்ல வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் ரூ. 250 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனை அறிந்த ஜெயலலிதா “நாமே சம்பளமும் கொடுத்து நாமே அதனை திருப்பி வாங்கிக் கொள்வதா?” என்று எச்சரிக்கை செய்து போக்குவரத்து வசதியை இலவசமாக்கி கொடுத்தார்.

அதே போன்று எஸ்டேட்டில் பணிபுரியும் பெண்கள் அல்லது குழந்தைகள் என்ன கேட்டாலும் அதனை உடனே நிறைவேற்றி கொடுத்தார். அவரை பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தால் தயங்காமல் வந்து அவர்களை பார்த்து முகம் கொடுத்து பேசும் தன்மை கொண்டவராகவே இருந்தார் ஜெயலலிதா. இந்த எஸ்டேட்டில் இருக்கும் அனைவரிடமும் ஜெவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இருக்கும் என்றும் தெரிவித்தார் திவாகரன்.

publive-image

அவருடைய தேயிலை தோட்டத்தில் அதிகம் தேயிலை பறித்தவர்களுக்கு ஆண்டுக்கு கால் பவுன், அல்லது அரைப்பவுன் தங்கம் தருவது போன்று உத்வேகம் அளித்தார் ஜெயலலிதா. அவர் இருக்கும் போது இப்படியான சர்ச்சைகளோ, மர்மங்களோ கொடநாட்டில் இல்லை. ஒரு வி.ஐ.பியின் வீடு எப்படி இருக்குமோ அப்படி தான் இருந்தது கொடநாடு பங்களாவும் எஸ்டேட்டும். நான் அங்கு பணியாற்றும் போது ஜெயலிதா 2 முறை வந்திருக்கிறார். ஒருமுறை 15 நாட்கள் தங்கியிருந்தார். பிறகு ஒரு சமயம் வந்து நான்கு மாதங்கள் தங்கியிருந்தார். அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் எல்லாரும் இங்கே வந்து செல்வதுண்டு. ஒரு சிறிய தலைமைச் செயலகமே இங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்றார் திவாகரன்.

கொடநாடு வழக்கு மறுவிசாரணை மக்களுக்கும் நன்மை அளிக்கும் - திமுகவினர் நம்பிக்கை

“இங்கு நடைபெறாத போராட்டமே இல்லை. அடக்குமுறைகள் தான் அனைத்திலும். பஞ்சாயத்திற்கு உட்பட்ட சாலைகளை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது என்றார்கள். வனத்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்களும் இதனோடு சேர்க்கப்பட்டது. முக்கியமாக வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் 2009ம் ஆண்டு ஹெலிபேட் உருவாக்கப்பட்டது. உள்ளே நடைபெற்றது எல்லாம் தனி சாம்ராஜ்ஜியம் தான். என்னுடைய அப்பா, தற்போது நீலகிரி மாவட்ட ஊராட்சிமன்ற தலைவராக இருக்கும் பொன்தோஸ், தொடர்ந்து வழக்குகள் தொடுத்தார். ஜெயலலிதா காரில் செல்லும் நுழைவாயிலை மறித்தார். ஆனாலும் மக்களின் போராட்டங்களை தாண்டி தான் இந்த எஸ்டேட் செயல்பட்டு வந்தது” என்றார் விவேக் பொன்தோஸ்.

publive-image
விவேக் பொன்தோஸ்

பினாமி சட்டத்தின் கீழ் கொடநாடு எஸ்டேட் கொண்டு வரப்பட்டு தற்போது வருவாய்த்துறை கண்காணிப்பின் கீழ் உள்ளது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு முன்பு இங்கே கட்டுப்பாடுகள் எப்படி இருந்ததோ அதே தான் தற்போதும் நிலவுகிறது. இங்கு பணியாற்றிய பல முக்கிய ஆட்கள் வேலையை விட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். அதே போன்று எஸ்டேட் பணியாளர்களிலும் தமிழ் ஆட்களை அனுப்பிவிட்டு வட இந்தியர்களை எஸ்டேட் நிர்வாகம் அதிக அளவில் பணி அமர்த்தியுள்ளது.

நீலகிரி மாவட்ட திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளாராக இருக்கும் விவேக் பொன்தோஸ் ”மறுவிசாரணை வேண்டும் என்று திமுக கோரினால், சட்டரீதியாக அதனை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் இங்கு நடப்பதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது. திமுக தேர்தல் வாக்குறுதிகளை தான் நிறைவேற்றுகிறது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், இம்மக்கள் நிம்மதியாக இந்த சாலைகளில் பயமின்றி பயணிப்பார்கள்.அரசே வருங்காலத்தில் இந்த எஸ்டேட்டை எடுத்து நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் விரும்புகின்றனர்” என்று விவேக் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுக்கு பேட்டி அளித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kodanad Jeyalalitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment