CM Edappadi K Palaniswami Filed Defamation Case on Mathew Samuel: கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். ரூ 1 கோடியே 10 லட்சம் நஷ்ட ஈடு கோருகிறார் முதல்வர்.
மேத்யூஸ் சாமுவேல், தெஹல்கா இணைய இதழின் முன்னாள் ஆசிரியர். தற்போது நாரதா என்கிற இணைய இதழை நடத்துகிறார். தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லத்தில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக மேத்யூஸ் சாமுவேல் ஒரு ஆவணப் படத்தை டெல்லியில் வெளியிட்டார்.
அந்த வீடியோவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது மேற்படி கொலை, கொள்ளை தொடர்பாக புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து மேத்யூஸ் சாமுவேல் மற்றும் கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட சயன், மனோஜ் ஆகியோர் மீது அதிமுக சார்பில் புகார் கூறப்பட்டது. அந்த கிரிமினல் புகாரின் அடிப்படையில் சயன், மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே மேத்யூஸ் சாமுவேல் மீது இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 23) வழக்கு தொடர்ந்தார். அதில் தன் மீது அவதூறு ஏற்படுத்தியதற்காக மேத்யூஸ் சாமுவேல் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என முதல்வர் தரப்பில் கோரப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மேத்யூஸ் சாமுவேல், மீண்டும் தனது குற்றச்சாட்டுகளை வலியுறுத்திப் பேசினார். தனது பின்னால் எந்த அரசியல் கட்சியும் இல்லை என்றும் அவர் கூறினார்.