மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்பு பயின்ற பெண் மருத்துவர் (31) கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்தார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையின் கருத்தரங்க கூடத்தில் தூங்கிய அவர், கடந்த 9-ம் தேதி காலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக, காவல் துறையுடன் இணைந்து பணியாற்றி வந்த தன்னார்வலர் சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த படுகொலையை கண்டித்தும், பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டும் நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுகள் செயல்படவில்லை.
சென்னையில், ஸ்டான்லி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் 300க்கும் மேற்பட்டோர் கொல்கத்தா மருத்துவ மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு, இன்று மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தியும், செல்போனில் டார்ச் அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சையில் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள், பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு கண்டன பேரணி நடத்தினர்.
தமிழகத்தை போன்று உத்தரகாண்ட், ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மாணவர்களின் கண்டன பேரணி நடைபெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“