கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஹோமியோபதி மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்பு பயின்ற பெண் மருத்துவர் (31) கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்தார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையின் கருத்தரங்க கூடத்தில் தூங்கிய அவர், கடந்த 9-ம் தேதி காலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக, காவல் துறையுடன் இணைந்து பணியாற்றி வந்த தன்னார்வலர் சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கோவை மாவட்ட ஹோமியோபதி மருத்துவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் கருப்பு உடை அணிந்து கண்டன பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், நாட்டில் மருத்துவர்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“