சென்னை மதுரவாயல் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த கன்னியம்மன் நகரில் பர்வின் குமாவத் (32) என்பவர் வீட்டிலேயே அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று வந்த வடமாநில நபர் ஒருவர் 6 கிராம் மோதிரத்தை அடகு வைக்க முயன்றார்.
அந்த நகையை சோதித்தபோது, அது தங்க முலாம் பூசப்பட்ட போலி நகை என தெரியவந்தது. இதையடுத்து பர்வின் மதுரவாயல் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் போலி நகையை அடகு வைக்க முயன்ற நபரை கைது செய்தனர்.
விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட நபர் மேற்குவங்கம் கொல்கத்தாவை சேர்ந்த ஆதில் உசேன் (40) என்பவது தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.