கொள்ளிடம் பாலம் விரிசல் : கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் வேகமாக நீர் நிரம்பியது. அதனைத் தொடர்ந்து அனைத்து அணைகளில் இருந்தும் உபரிநீர் திறந்துவிடப்பட்டது.
மேட்டூர் அணை மட்டும் இவ்வருடத்தில் இரண்டு முறை தன்னுடைய முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. அதனைத் தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் காவேரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பல்வேறு இடங்களைத் தாண்டி கொள்ளிடம் வழியாக முக்கொம்பு வந்தடையும் காவேரி நீர். காவேரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காலத்தில் பாதுகாப்பு கருதி கொள்ளிடத்தில் அதிக அளவு நீர் திறந்துவிடுவது வழக்கம். இந்த தண்ணீர் வடவாறு மற்றும் பல வாய்க்கால்களை நிறைத்துவிட்டு இறுதியில் கடலில் கலக்கும்.
கொள்ளிடம் பாலம் வரலாறு
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1924ம் ஆண்டு ஒரு இரும்புப் பாலம் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால் காலப்போக்கில் அதில் பெரிய கனரக வாகனங்களை இயக்க இயலவில்லை. பின்னர் கொள்ளிடம் ஆற்றில் நெடுஞ்சாலைத் துறையால் புதிய பாலம் கட்டப்பட்டது.
தற்போது நொடிக்கு ஒரு லட்சம் கன அடி அளவு நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும் காரணத்தால் கொள்ளிடம் பழைய பாலத்தில் விரிசல் ஏற்ப்ட்டுள்ளது. 23 தூண்களைக் கொண்ட கொள்ளிடம் பாலம் 18வது தூணில் மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு தடை விதித்து உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறது தமிழக அரசு.
ஆனால் ராணுவத்தின் உதவியுடன் சரியான முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் ட்விட்டர் பகுதியில் பதிவிட்டிருக்கிறார்.
கொள்ளிடம் பாலம் நள்ளிரவில் பார்வையிட்ட திருச்சி ஆட்சியர்
விரிசல் பெரிதாக வளர்ந்து எந்நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து நேற்றிரவு திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசா மணி நள்ளிரவு 2 மணிக்கு கொள்ளிடம் பழைய பாலத்தை சென்று பார்வையிட்டார்.
பழைய பாலம் இடிந்து விழுந்தாலும், அதனால் புதிய பாலத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று தகவல் கூறிய ராசா மணி திருச்சி மாவட்ட வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப்புத்துறை, வட்டார வளர்ச்சி, அலுவலர்கள், போலீசார், மாநகராட்சி என அனைத்து துறைகளும் வெள்ள மீட்புப் பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆற்று நீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் சென்றுவிட்டதை தொடர்ந்து மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.