திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் நேற்று குளிக்கச்சென்ற வேத பாடசாலை மாணவர்கள் 4 பேர் நீரில் மூழ்கினர். அவர்களில் ஒருவர் உயிருடனும், மற்றொருவர் சடலமாகவும் நேற்று மீட்கப்பட்டனர். 2 பேரை தேடும் பணி தொடர்ந்த நிலையில் இன்று நண்பகல் ஒரு மாணவர் சடலமாக மீட்க்கப்பட்டார். மீதமுள்ள ஒரு மாணவரின் கதி என்ன என்பது தெரியாததால் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மீட்பு பணியில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.பழனியாண்டியும் இணைந்து செயல்பட்டு வருகின்றார்.
ஸ்ரீரங்கம் மேலவாசல் பட்டர்தோப்பு பகுதியில் ஆச்சார்யா ஸ்ரீமான் பட்டர் குருகுலம் வேத பாடசாலை செயல்பட்டு வருகிறது. கோடை விடுமுறையையொட்டி தமிழகம் மட்டுமல்லாது பிற மாநில, மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து 50-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கி வேத பாடங்களைப் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இங்கு தங்கி பயிலும் ஈரோடு மாவட்டம் நசியனூர் வலரசம்பட்டியைச் சேர்ந்த, பிளஸ் 1 மாணவர் கோபாலகிருஷ்ணன்(17), மன்னார்குடி மேல முதல் தெருவைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர் விஷ்ணுபிரசாத்(13), மன்னார்குடி கனகசபை சந்து மேற்கு 4-வது தெருவைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் ஹரிபிரசாத்(14), ஆந்திர மாநிலம் குண்டூர் சம்பத் நகரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் கிடாம்பி வெங்கடகிரிதர் சாய் சூர்ய அபிராம்(14) ஆகியோர் நேற்று காலை ஸ்ரீரங்கம் யாத்ரிக நிவாஸ் எதிரேயுள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர்.

தற்போது, முக்கொம்பு பகுதியில் நடைபெறும் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளுக்காக காவிரியில் திறக்க வேண்டிய நீரின் அளவைக் குறைத்து, அதற்கு பதிலாக கொள்ளிடம் ஆற்றில் 1,900 கனஅடி நீர் திறந்து விடப்பட்டிருந்தது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து திடீரென அதிகரித்திருந்தது.
இதையறியாமல் மாணவர்கள் 4 பேரும் குளிப்பதற்காக கொள்ளிடம் ஆற்றுக்குள் இறங்கினர். அப்போது நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் விஷ்ணுபிரசாத், அபிராம், ஹரிபிரசாத் ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை கோபாலகிருஷ்ணன் காப்பாற்ற முயற்சித்தபோது, அவரும் ஆழமான பகுதிக்குள் சிக்கினார். இவர்களின் கூச்சல்கேட்டு அப்பகுதியிலிருந்தவர்கள் ஓடிச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், கோபாலகிருஷ்ணன் உயிருடன் மீட்கப்பட்டார்.

மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்களும், ஸ்ரீரங்கம் போலீஸாரும் ஈடுபட்டனர். இதற்காக முக்கொம்பு மேலணையிலிருந்து கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், விஷ்ணுபிரசாத் சடலமாக மீட்கப்பட்டார்.
இன்று காலை மீண்டும் ஹரிபிரசாத், அபிராம் ஆகியோரை தேடும் பணி தொடர்ந்த நிலையில், மீட்பு பணிகளை ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு அங்கு சலவை செய்யும் தொழிலாளர்களை பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினார். அங்கு சிறுவர்களை இழந்து நிற்கும் பெற்றோர்களிடம், பாடசாலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார், இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அங்கு ஆய்வு செய்து கொண்டிருந்த நிலையில் மேலும் ஒரு சிறுவனின் (ஹரிபிரசாத்) உடல் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் பல்வேறு இடங்களில் சுழல் பகுதிகளில் உள்ளதால் விடுமுறை நாட்களில் மாணவர்கள் குளிக்கச் செல்வதை தடுக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட நிலையில் தற்போது நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நீரில் மூழ்கிய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அபிராம் என்ற சிறுவனை நேற்று முதல் இன்றும் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.மேற்படி சிறுவனை தேடும் பணியினை சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் மேற்பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு கோடைகால விடுமுறை விடப்பட்டிருப்பதால் நீர் நிலைகளை தேடி சுற்றுலா செல்லும் பொதுமக்கள், மாணவ்-மாணவிகள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரித்ததால் 3 மாணவர்கள் கொள்ளிடம் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. கொள்ளிடம் ஆற்றில் இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளில் மாட்டு வண்டிகளில் மணல் திருட்டு நடப்பதால் கரையோரங்கள் திடீரென ஆழமாகிப்போனதும் இந்த விபத்துக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்