சட்டவிரோத பேனர் விழுந்து இளம்பெண் பலியானதை தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் சூர்யா படநிகழ்ச்சிகளையொட்டி, பேனர் வைக்க வேண்டாம் என்று தங்களது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சுபஸ்ரீயின் மரணத்திற்கு பிறகு பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நடிகர் விஜய் உத்தரவு : பேனர்கள் வைக்ககூடாது என தனது ரசிகர் மன்றங்களுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார். பேனர்கள் வைக்கப்படவில்லை என்பதை அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதிசெய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, பிகில் பட இசை வெளியீட்டு நிகழ்வின் போது ரசிகர்கள் யாரும் பேனர்கள் வைக்ககூடாது கேட்டுக்கொண்டுள்ளார்.
கெஞ்சி கேட்கிறேன்... இனி பேனர் கலாசாரம் வேண்டாம்'' - நடிகர் சூர்யா
"தமிழகத்தில் அனைவரும் கவலைப்படும் விதமாக ஒரு சம்பவம் நடந்து உள்ளதால் இனிமேலும் பேனர் கலச்சாரம் வேண்டாம் என நடிகர் சூர்யா கேட்டு கொண்டுள்ளார்.
காப்பான் திரைப்பட குழுவினர் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா ,சமுத்திரகனி, தலைவாசல் விஜய், இயக்குனர் கே.வி.ஆனந்த் , நடிகை சாய்ஷா ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் கலந்து கொண்ட பேசிய நடிகர் சூர்யா, அனைவருக்கும் கவலையளிக்கும் விதமாக ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது எனக்கூறினார்.
தனது ரசிகர்கள், இரத்த தானம் உள்ளிட்ட நல்ல விஷயங்கள் செய்து வருவதை கவனித்து வருவதாக கூறிய சூர்யா, படம் வெளியாகும் போது கொண்டாட்டத்தில் ஈடுபடும் ரசிகர்கள் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பேனர்கள் வைத்து தான் தன்னை கவனிக்க வைக்க வேண்டும் என்பதில்லை என்று கூறிய சூர்யா, பேனர் வைக்க வேண்டாம் என தான் அடிக்கடி கூறியிருப்பதாகவும், இனிமேலும் அது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.