கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுசெயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதன்படி, "2008 ஆம் ஆண்டு இருந்த அரசியல் வேறு, இப்போது இருக்கின்ற அரசியல் வேறு. திராவிட அரசியல், தமிழ் தேசிய அரசியல், ஆன்மிக அரசியல் எனக் கட்சியினர் பேசு வருகின்றனர். ஆனால், நாம் எடுப்பது ஆக்கப்பூர்வமான அரசியல். மக்களுக்கு சேவை செய்கின்ற நேர்மையான அரசியல் நம்மிடம் தான் இருக்கிறது.
பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசு தயங்க கூடாது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அவர்கள் கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும். சொத்து வரியால் மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவதால் அதனை குறைக்க வேண்டும்.
கோவை மாநகராட்சி பெரிய அளவில் விரிவடைந்து வருவதால் அதனை இரண்டாக பிரிக்க வேண்டும். ஆனைமலை - நல்லாறு திட்டத்தை கேரள அரசுடன் பேசி விரைந்து அமல்படுத்த வேண்டும். நாட்டில் நயன்தாராவுக்குக் தனுஷுக்கும் இடையே நடப்பது தான் பிரச்சனையா? பிசினஸ் நடக்க வேண்டும் என்பதற்காக சண்டை போட்டுக்கொள்கிறார்கள். நாம் அதை தேவையில்லாமல் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.
கோவை மாவட்டத்திற்கு கொண்டு வந்துள்ள திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும். கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து கொண்டு வர வேண்டும். நியாய விலைக்கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டும்.
ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பதை தேர்தலுக்கு பின் நடக்கும் சூழலை பொறுத்து தான் பேச வேண்டும். சில கட்சிகள் தலைப்பு செய்திகளில் இடம்பெற வேண்டும் என்பதற்காக இவ்வாறு பேசி வருகின்றனர். ஆக்கப்பூர்வமான வகையில் மக்களுக்கான பிரச்சனைகளை முன்னெடுத்து பேச வேண்டும்.
விஜய் கட்சி தொடங்கிய பின்னர் நாம் தமிழர் கட்சியில் சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் தான் சீமான் மற்றும் ரஜினி சந்திப்பு நடந்தது. தி.மு.க கூட்டணியில் இருந்து விலக வேண்டிய சூழல் எங்களுக்கு இல்லை. நெஞ்சை பிளந்து காண்பிக்க வேண்டிய அவசிமும் இல்லை" என அவர் தெரிவித்தார்.
செய்தி - பி.ரஹ்மான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.