தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு, திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றது முதல் பல அதிரடியான தமிழக அரசு நிர்வாகத்தில் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து வருகிறார். நேர்மையான அதிகாரிகளுக்கு முக்கியமான துறைகளைக் கொடுத்து வருகிறார் என்று பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், கொங்கு மண்டல திமுகன்வினரோ, முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் என்று பதவியேற்றபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், கொங்கு மண்டலத்தில் திமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு வஞ்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர்களின் அதிகாரிகள் அப்படியேதான் இருக்கிறார்கள். அவர்களை எப்போது மாற்றம் செய்யப்போகிறீர்கள் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணி இட மாற்றம் செய்து வாரத்திற்கு குறைந்த பட்சம் 2 – 3 உத்தரவுகள் வெளியாகிறது. இந்த சூழலில்தான், மேற்கு மண்டலத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சாதகமாக செயல்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகளை மாற்றவில்லை என்று திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சில உயர் அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார்கள். திமுக அரசு முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்குமானால், இந்த மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் அவருக்கு தகவல் சொல்லமாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம்; அதுமட்டுமல்ல, சில காவல்துறை அதிகாரிகள் கோவையில் திமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு பழிவாங்கினார்கள். அதனால், மேற்கு மண்டலத்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகளை மாற்ற வேண்டும், அவர்களை களையெடுக்க வேண்டும் என்று கொங்கு மண்டல திமுகவினர் குரல் எழுப்பியுள்ளனர்.
அதிமுக அமைச்சர்களுக்கு விசுவாசமாக செயல்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் என்று கொங்கு மண்டல திமுகவினர் ஒரு பெரிய பட்டியலே போட்டுள்ளனர். அவர்களில், 1.ஊட்டி எஸ்.பி. பாண்டியராஜன், கோவை நகர போக்குவரத்து துணை கமிஷனர் முத்தரசு, கோவை நகர துணை கமிஷனர் ஸ்டாலின், திருப்பூர் நகர துணை கமிஷனர் சுரேஷ்குமார், ஈரோடு எஸ்.பி. தங்கதுரை, நாமக்கல் எஸ்.பி. சக்தி கணேசன், சேலம் மாநகர துணை கமிஷனர் சந்திரசேகர், மேற்கு மண்டல மதுவிலக்குப் பிரிவு எஸ்பி குணசேகர், எஸ்பி அனிதா, ஈஸ்வர மூர்த்தி ஐபிஎஸ், அமல்ராஜ் என்று அந்த பட்டியல் நீள்கிறது.
கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோவை மாவட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 10 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. அதனால், கொங்கு மண்டலத்தில் ஏன் திமுக தோல்வியைத் தழுவியது . அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று ஆய்வு செய்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் கொங்கு மண்டல திமுகவினர் எழுப்பியுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின், ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை மாற்றும் நடவடிக்கையை முழுவதுமாக நிறைவு செய்யவில்லை. அவருடைய நடவடிக்கை தொடரும். அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு விசுவாசமான காவல்துறை அதிகாரிகள் மேற்கு மண்டலத்தில் இருந்து மாற்றப்பட வேண்டும் என்று ஒலிக்கும் கொங்கு மண்டல திமுகவினர் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் கவனிப்பார். நடவடிக்கையும் எடுப்பார் என்கிறார்கள் திமுக வட்டாரங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“