தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் சூரியமூர்த்திக்கு தி.மு.க கூட்டணியில் உள்ள வி.சி.க உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தலித்துகளுக்கு எதிராக சூரியமூர்த்தி பேசிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு (9+1), வி.சி.க (2), சி.பி.ஐ (2), சி.பி.எம் (2), ம.தி.மு.க (1), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (1), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (1) ஆகிய கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இதில், தி.மு.க (21), காங்கிரஸ் கட்சிகளில் மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க, ம.தி.மு.க கட்சிகள் இந்த முறை தனிச் சின்னத்தில் போட்டியிடுகின்றன. கடந்த 2019-ம் தேர்தலில் வி.சி.க பொதுச் செயலாளர் ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியில் தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அதே போல, ம.தி.மு.க-வைச் சேர்ந்த கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். ஆனால், இந்த முறை வி.சி.க, ம.தி.மு.க கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. ஆனால், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மட்டும் நாமக்கல் தொகுதியில் தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில், தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, பா.ஜ.க கூட்டணி என மூன்று கூட்டணிகள் தேர்தலைச் சந்திக்கின்றன. இதில் தி.மு.க கூட்டணிதான் முதலில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தை இறுதி செய்தது.
இந்நிலையில், தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில், நாமக்கல் தொகுதியில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது தி.மு.க கூட்டணி கட்சி வி.சி.க-வினர், திராவிட இயக்க ஆதரவாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொ.ம.தே.க வேட்பாளர் சூரியமூர்த்தி பேசிய சர்ச்சை வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சார்ந்த சூரிய மூர்த்தி தலித்துகளைவெட்டுவோம் குத்துவோம் என்று தூண்டியதில் ஒரு முக்கியமான குற்றவாளி. இவரை வேட்பாளராக அறிவிப்பது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல.. மாண்புமிகு முதல்வர் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.@CMOTamilnadu
— SannaOfficial (@gowthama_sanna) March 19, 2024
இது குறித்து வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் கௌதம சன்னா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சார்ந்த சூரிய மூர்த்தி தலித்துகளைவெட்டுவோம் குத்துவோம் என்று தூண்டியதில் ஒரு முக்கியமான குற்றவாளி. இவரை வேட்பாளராக அறிவிப்பது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல.. மாண்புமிகு முதல்வர் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.” என்று முதல்வர் மு.க. ஸ்டாலினை டேக் செய்து வலியுறுத்தியுள்ளார்.
“தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் கவுண்டர் வீட்டுப் பெண்ணைக் காதலித்து மணம் முடிக்க நினைத்தால் அவனுடைய தாயின் கருவில் வளரும்போது தாயோடு கருவறுப்போம்” என்று சுயசாதிவெறியுடன் பேசிய சமூகவிரோதி சூரிய மூர்த்தியை கொ.ம.தே.க சார்பில் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்திருப்பதை… pic.twitter.com/Lb2B5QuuG3
— நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) March 19, 2024
இதே போல, இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், தி.மு.க கூட்டணியில் சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேட்பாளர் அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
நீலம் பண்பாட்டு மையம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் கவுண்டர் வீட்டுப் பெண்ணைக் காதலித்து மணம் முடிக்க நினைத்தால் அவனுடைய தாயின் கருவில் வளரும்போது தாயோடு கருவறுப்போம்” என்று சுயசாதிவெறியுடன் பேசிய சமூகவிரோதி சூரிய மூர்த்தியை கொ.ம.தே.க சார்பில் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்திருப்பதை சமூகநீதிக் காவலர்களாகச் சொல்லிக்கொள்ளும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பரிசீலிக்க வேண்டும். பகுத்தறிவும் சுயமரியாதையும் உள்ளவர்களால் எவ்வாறு இத்தகைய சாதி வெறியர்களுக்காக வேலை செய்ய முடியும். திட்டமிட்டே தலித்துகளுக்கு எதிராகச் செயல்படுகின்ற சாதி சங்கங்கள் தொடர்ந்து இவ்வாறு அமைதியைச் சீர்குலைக்கும் விதத்தில் பேசுவதைப் பிற கட்சிகள் கண்டுகொள்ளாவிட்டாலும் பெரியாரின் கொள்கையைக் கடைபிடிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு கட்சி அறத்தோடு செயல்படுவதுதான் சமூகநீதிக்கு அழகு. அந்த வகையினில் சூரிய மூர்த்திக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பு நிச்சயம் திரும்பப் பெறப்பட வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளது.
ஆணவப்படுகொலை செய்வேன் என்று வெளிப்படையாக பேசி தாயோடு சேர்த்து குழந்தையையும் கருவறுப்போம் என்று ஜாதி வெறியுடன் பேசிய ஜாதி வெறியர் ஒருவரை வேட்பாளராக போடுகிறது கெ.ம.தே.க
— கபிலன் (@_kabilans) March 18, 2024
சமூக நீதி பேசும் ஜாதி ஒழிப்பு பேசி விட்டு இந்தியா கூட்டனியிலிருந்து இது போன்ற ஜாதி வெறியர்களை ஒரு வேட்பாளராக… pic.twitter.com/vmCDy6pxDX
அதே போல, தி.மு.க-வை தொடர்ந்து ஆதரித்து வரும் திராவிட இயக்க ஆதரவாளர் எக்ஸ் பயனர் கபிலன், “ஆணவப்படுகொலை செய்வேன் என்று வெளிப்படையாக பேசி தாயோடு சேர்த்து குழந்தையையும் கருவறுப்போம் என்று ஜாதி வெறியுடன் பேசிய ஜாதி வெறியர் ஒருவரை வேட்பாளராக போடுகிறது கெ.ம.தே.க.
சமூக நீதி பேசும் ஜாதி ஒழிப்பு பேசி விட்டு இந்தியா கூட்டனியிலிருந்து இது போன்ற ஜாதி வெறியர்களை ஒரு வேட்பாளராக போடுவது நியாயமே இல்லை.
இந்த நபர் எப்படி மற்ற சமூக மக்கள் சிக்கலை தீர்ப்பார் ? தி.மு.க தலையிட்டு இந்த வேட்பாளரை உடனடியாக மாற்ற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் ஈரோடு அருகே கவுண்டர் சாதிப் பெண்ணை திருமணம் செய்த பட்டியிலினப் பையனை கொலை செய்ய அந்தப் பெண்ணின் தந்தை செய்த முயற்சியில் அந்தப் பையனின் 15-வயது சகோதரி கொல்லப்பட்டாள். இந்த videoல் பேசும் சாதி வெறி பிடித்தவன் அந்தக் கொலைக்கு வித்திட்டவன் இல்லையா? அவனை நாமக்கல் வேட்பாளராக… https://t.co/p1MvlortkG
— T.N. Raghu (@tnrags) March 19, 2024
விளையாடு மற்றும் அரசியல் விமர்சகர் டி.என். ரகு தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், “சமீபத்தில் ஈரோடு அருகே கவுண்டர் சாதிப் பெண்ணை திருமணம் செய்த பட்டியிலினப் பையனை கொலை செய்ய அந்தப் பெண்ணின் தந்தை செய்த முயற்சியில் அந்தப் பையனின் 15-வயது சகோதரி கொல்லப்பட்டாள். இந்த வீடியோவில் பேசும் சாதி வெறி பிடித்தவன் அந்தக் கொலைக்கு வித்திட்டவன் இல்லையா? அவனை நாமக்கல் வேட்பாளராக எப்படி ஏற்றுக் கொள்ளலாம்? ஊருக்கெல்லாம் சமூக நீதி பாடம் எடுக்கும் தி.மு.க.வுக்கு இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாதா? அரசியலில் வெற்றி பெற எதையும் கண்டு கொள்ள மாட்டீர்கள் என்றால், தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் என்ன வேறுபாடு? பெரியார், அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்த தகுதியில்லாத கூட்டம் நீங்க.” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதனிடையே, கொ.ம.தே.க இளைஞரணி செயலாளரும், நாமக்கல் தொகுதி வேட்பாளருமான சூரியமூர்த்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
இந்த நிலையில், கொ.ம.தே.க சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் சூரியமூர்த்தி தன் மீதான விமர்சனங்கள் குறித்து விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னை அறிவித்த நாளில் இருந்து எதிர்க்கட்சியினர் தோல்வி பயத்தில் என் மீது பொய்யான, மலிவான காணொலி பிரசாரங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த காணொலி 2018-ம் ஆண்டே ஈரோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அது தவறான காணொலி அது பொய்யானது என்று நீதிமன்றம் 2021-ம் ஆண்டே உத்தரவிட்டிருக்கிறது. அப்படி இருக்கிற சூழ்நிலையில், மீண்டும் என்னை, எங்கள் வெற்றிக் கூட்டணியை தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாத, திராணியற்ற எதிர்கட்சியினர் பொய்யான மலிவான கானொலியை பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த பிரசாரத்தை சட்டரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதை பதிவிடுபவர்கள் மீதும் பகிர்பவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்வோம்.” என்று தெரிவித்துள்ளார்.
சூரிய மூர்த்தி இந்த வீடியோவில் இந்த வழக்கில் தன்னை விடுதலை செய்து விட்டார்கள் என்று கூறி இருக்கிறார் ஆனால் ஏன் விடுதலை செய்திருக்கிறார்கள் என்று சொல்லவில்லை,
— கபிலன் (@_kabilans) March 19, 2024
(அரசு தரப்பில் சாட்சியானது மெய்ப்பிக்கப்படவில்லை) வழக்கு நடந்தது 2018-2019 அதிமுக ஆட்சி காலம்
அதே போல இது அவர் பேசியது… pic.twitter.com/J7BhT83Fka
இது குறித்து கபிலன் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், “சூரிய மூர்த்தி இந்த வீடியோவில் இந்த வழக்கில் தன்னை விடுதலை செய்து விட்டார்கள் என்று கூறி இருக்கிறார் ஆனால் ஏன் விடுதலை செய்திருக்கிறார்கள் என்று சொல்லவில்லை.
(அரசு தரப்பில் சாட்சியானது மெய்ப்பிக்கப்படவில்லை) வழக்கு நடந்தது 2018-2019 அ.தி.மு.க ஆட்சி காலம்.
அதே போல இது அவர் பேசியது இல்லை உருவாக்கப்பட்ட காணொளி என்றும் எந்த எடத்திலும் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை
அரசு தரப்பு சாட்சி பிறழ் சாட்சியாக மாறியதாலும், அரசு தரப்பு மெய்பிக்க தவறியதாலும், எதிரியை குற்றவாளி இல்லை என தீர்ப்பு வந்திருக்கிறது.
2019-ல் என்ன நடந்து இருக்கும்னு எல்லாருக்கும் தெரிஞ்ச ஒன்னுதான். ஆனால், இந்த வீடியோவில் பேசியது அவர் இல்லை என்று இது திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட வீடியோ என்று எங்கும் தீர்ப்பில் இல்லை.” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.