கோவை அவிநாசி சாலை சின்னியம்பாளையத்தில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் கோவை மாவட்ட பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய கொ.ம.தே.க பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், அரசியல் களத்தை திராவிட அரசியல், தமிழ் தேசிய அரசியல், ஆன்மிக அரசியல் என பிரித்து கூறுகின்றனர். கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் அரசியல் ஆக்கப்பூர்வமான அரசியல். அனைத்து நல்ல திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் இந்த ஆக்கப்பூர்வமான அரசியல். தமிழக அரசு பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும், “கோவை மாநகராட்சி பெரிய மாநகராட்சியாக விரிவடைந்து வருவதால் அதனை இரண்டாகப் பிரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனைமலை நல்லூறு திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும். கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.” என்று கொ.ம.தே.க பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் கூறினார்.
ஆட்சியிலே பங்கு, அதிகாரத்திலே பங்கு என்ற வி.சி.க-வின் கோரிக்கை குறித்து கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் பேசுகையில், “என்னைப் பொறுத்தவரை கொங்கு மண்டலத்திற்கான திட்டங்கள் வேண்டும்; என்னுடைய, ‘ஆட்சியிலே பங்கு’ என்ற கோஷம் என்பது நான் கேட்கின்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். கொங்கு மண்டலத்தினுடைய வளர்ச்சித் திட்டங்கள் தாமதப்படுத்தக் கூடாது; இதுதான் என்னைப் பொறுத்தவரை, ஆட்சியில் பங்காக நான் பார்க்கிறேன். ‘ஆட்சியிலே பங்கு அதிகாரத்தில் பங்கு’ என்பது தேர்தலுக்குப் பிறகு இருக்கிற சூழ்நிலையைப் பொறுத்து அது தானாக நடக்கும் ; இப்போது அதைப்பற்றி பேசுவதெல்லாம் பத்திரிகையினுடைய கவனத்தை தன் பக்கம் ஈர்ப்பதற்காக, தான் எப்போதும் தலைப்புச் செய்தியில் இருக்க வேண்டும் என்பதற்காக எடுக்கின்ற நிகழ்வுகள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலே ஆதவ் அர்ஜுனாவுடைய குரல்தான் அதை துவக்கி இருக்கிறது. ஆதார் அர்ஜுனா ஒரு தனித்தன்மை வாய்ந்தவர், திறமையானவர், அதிலே மாற்றுக் கருத்து கிடையாது. எல்லா வசதிகளையும் படைத்தவர், அவர் இன்றைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியிலே ஊடுருவிக் கொண்டிருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியை அவர் இரண்டாக உடைத்து விடுவாரோ என்கிற சந்தேகம் எனக்கு இருக்கிறது. ஆகவே, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும்.” என்று கொ.ம.தே.க பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் கூறினார்.
தமிழத்தில் ஆளும் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் என வி.சி.க தொடர்ந்து தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது.
இந்நிலையில், வி.சி.க துணை பொதுச் செயலாளர், ஆட்சியிலே பங்கு வேண்டும், அதிகாரத்திலே பங்கு வேண்டும் என்று குரல் எழுப்பி வருகிறார். இது தி.மு.க கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த சூழலில்தான், ஆதவ் அர்ஜுனா வி.சி.க-வில் ஊடுருவியிருக்கிறார் என்றும் அவர் வி.சி.க-வை இரண்டாக உடைத்துவிடுவாரோ என்று சந்தம் இருப்பதாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“