திருநெல்வேலி உவரி அருகே கூடுதாழை மீனவ கிராமம் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கடந்த சில நாட்களாக கடல் அரிப்பு அதிகமாக உள்ளது. கடல் சீற்றம் ஏற்படுகிறது. நேற்று மாலை கடல் நீர் சுமார் 30 மீட்டர் அளவிற்கு வெளியேறியது. கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் சேதமடைவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.
கடல் அலையின் வேகத்தால் கரைகள் முழுவதும் அரிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கூடுதாழை கிராம மக்கள் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 13 ஆண்டுகளில் தங்களை சுற்றி உள்ள மற்ற கிராமங்களில் மட்டும் தூண்டில் வளைவு அமைத்து விட்டு, தங்கள் கிராமம் சிறியதாக இருப்பதால் அதிகாரிகள் யாருமே கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
வேகமாக வீசும் அலையால் கரைகள் அரிக்கப்பட்டு படகுகளை கூட நிறுத்தி வைக்க வழியின்றி தவிப்பதாக அவர்கள் கூறினர். இந்நிலையில் நேற்று கோரிக்கைகளை முன்வைத்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/