/indian-express-tamil/media/media_files/2025/02/25/3kmVugVy3wqsynrV8KJx.jpeg)
லஞ்ச ஒழிப்பு துறை சோதனை காழ்புணர்ச்சியால் செய்யப்பட்டது, இது முழுக்க முழுக்க அரசியல், இந்த வழக்கை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன் என கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.
கோவை அ.தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளரும் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ஜுனன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒன்பது பேர் இன்று காலை முதல் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனையடுத்து அவரது வீட்டில் முன்பு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, செங்கோட்டையன், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர்.
சுமார் 13 மணி நேர சோதனைக்கு பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சென்ற நிலையில் அங்கு திரண்டிருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.க தொண்டர்கள், மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அம்மன் அர்ஜுனனை வரவேற்றனர். வீட்டை விட்டு வெளியே வந்த அம்மன் அர்ஜுனன் தொண்டர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்களிடம் அம்மன் அர்ஜுனன் பேசும்போது, ”இந்த சோதனையானது காழ்புணர்ச்சியால் செய்யப்பட்டது. ரூ.2 கோடி 75 லட்சம் என வங்கி கணக்கில் உள்ளது. 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளேன்.
லஞ்ச ஒழிப்பு துறை சோதனை இரண்டு மணி நேரத்தில் முடிவடைந்துவிட்டது. ஆனால் 7 மணிக்கு தான் செல்ல வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் காத்திருந்தனர். அனைத்தும் சட்டப்படி சரியாகத்தான் இருந்தது. வருமான வரித்துறையில் பதிவு செய்தது அனைத்தும் சரியாக தான் இருந்தது. மேலும் பான் கார்டு, பாஸ்புக் உள்ளிட்டவற்றின் நகல்களை மட்டுமே அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். சோதனை தொடர்பாக தனக்கு முன்பு எந்த தகவலும் தெரியவில்லை. காலை நடைபயிற்சி செல்லும்போது என்னை போனில் அழைத்தனர்.
அ.தி.மு.க தொண்டர்கள் எத்தனை சோதனைகள் வந்தாலும் அஞ்சமாட்டோம். என்னிடம் எந்த கேள்வியும் அதிகாரிகள் கேட்கவில்லை. இது முழுக்க முழுக்க அரசியல் என தெரிவித்தார்.
செங்கோட்டையன் நேரில் வந்தது தொடர்பான கேள்விக்கு, அனைவரும் ஒற்றுமையாக தான் இருப்பதாக பதிலளித்தார். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்திருத்தற்கு நன்றி தெரிவித்தவர், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பக்கபலமாக உடனிருந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்த வழக்கை நான் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன், இந்த சோதனையை வைத்து அ.தி.மு.க தொண்டனை அசைத்து கூட பார்க்க முடியாது. அச்சம் வந்ததால் சோதனை செய்கிறார்கள், அ.தி.மு.க தொண்டன் ஆலமர வேர் போன்று வலிமையாக இருப்பார்கள். இவ்வாறு அம்மன் அர்ஜூனன் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.