வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வந்த சூழலில் இன்று மாலை மாநகர மற்றும் மாவட்டத்தின் புறநகரப் பகுதிகளில் லேசான இடியுடன் பரவலாக மழை பெய்து வருகிறது
கோவையில் காலை முதல் மாலை வரை கடும் வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து இன்று பிற்பகல் முதல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்த நிலையில் மாலை 4:30 மணி அளவில் கோவை மாநகரம் மற்றும் புறநகர பகுதிகளில் லேசான இடியுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.
கோவை மாநகர பகுதிகளான காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை, காளப்பட்டி, சிவானந்தா காலனி, டவுன்ஹால், கணபதி, மணியக்காரன்பாளையம், சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.
இதனால் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்புபவர்களும், அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்பவர்களும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதேபோல் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான சூலூர், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், மதுக்கரை, எட்டிமடை, பொள்ளாச்சி சாலை ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.
இதேபோல், கோடை வெயில் தொடங்கி பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்த நிலையில் தற்போது திடீரென திருச்சி மாநகரில் பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட், மத்திய பேருந்து நிலையம், பால்பண்ணை, பொன்மலை, அரியமங்கலம், திருவெறும்பூர், உறையூர், உள்ளிட்ட பகுதிகளிலும் புறநகர் பகுதிகளில் மண்ணச்சநல்லூர் லால்குடி திருவரம்பூர் போன்ற பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலைக்கோட்டை மாநகரின் முக்கிய பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியதை காண முடிந்தது. இரண்டு நாட்களாக கடுமையான வெப்பத்திற்கு இந்த மழை பெய்ததால் பூமி குளிர்ந்ததை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
செய்தி: ரஹ்மான் - கோவை, க.சண்முகவடிவேல் - திருச்சி