/indian-express-tamil/media/media_files/2025/06/29/athikadavu-murder-2025-06-29-19-10-47.jpeg)
காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அன்சூர், குண்டூர், சொரண்டி, அத்திக்கடவு, மானாறு, பில்லூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் கால்நடை வளர்ப்பது, வனப்பகுதிக்குள் சென்று சீயக்காய், தேன் உள்ளிட்டவற்றை எடுத்து விற்பனை செய்வதை தொழிலாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில் அத்திக்கடவு அருகே உள்ள சொரண்டி பகுதியை சேர்ந்தவர் ராஜன் (48) அரசு பேருந்து டிரைவர். இவரது மகன் சஞ்ஜித்(23) கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் இரவு சஞ்ஜித், குண்டூர் பகுதியை சேர்ந்த முருகேசன் (37), அன்சூர் பகுதியை சேர்ந்த பாப்பையன் (50) உள்ளிட்டோருடன் அத்திக்கடவு அருகே வனப்பகுதியில் முயல் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது மூவரும் மது அருந்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே மது அருந்தும் போது மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் மற்ற இருவரும் சேர்ந்து சஞ்ஜித்தை தாங்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் சஞ்ஜித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து உடன் இருந்த முருகேசன், பாப்பையன் உள்ளிட்ட இருவரும் தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்த சஞ்ஜித்தின் சடலத்தை மீட்ட அவரது உறவினர்கள் அவர்களது கிராமமான சொரண்டிக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இதனிடையே நேற்று காலை இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி அதியமான், காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், கோவையில் இருந்து தடய அறிவியல் துறையினரும் வரவழைக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.
இதனையடுத்து சொரண்டிக்கு சென்ற போலீசார் மற்றும் தடய அறிவியல் துறையினர் அங்கு சஞ்ஜித்தின் சடலத்தை முழுமையாக ஆய்வு செய்ததில் இடது மார்பின் கீழே 4 இடங்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதை கண்டறிந்தனர். பின்,சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்தும், கொலை செய்யப்பட்டவருக்கும், மற்ற இருவருக்கும் துப்பாக்கி எப்படி கிடைத்தது? வேட்டைக்காக எடுத்துச் சென்றனரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதோடு தப்பி ஓடிய இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
வேட்டைக்குச் சென்ற இடத்தில் பழங்குடியின இளைஞர் நாட்டு துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அத்திக்கடவு அருகே வனப்பகுதியில் முயல் வேட்டைக்குச் சென்ற சஞ்ஜித், முருகேசன், பாப்பையன் உள்ளிட்ட மூவரும் ஏற்கனவே சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற வழக்கில் காரமடை வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டு பின்னர் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.