கோவை மருதமலை சாலை வடவள்ளி பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஒற்றை காட்டுயானையை கண்ட அதிர்ச்சியில் காவலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வடவள்ளி அடுத்த பாரதியார் பல்கலைக்கழகத்தில் காவலாளியாக பணியாற்றி வருபவர் சண்முகம் (57). இவர் இன்று காலை 10.30 மணியளவில் காவல் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்பொழுது வனபகுதியில் இருந்து ஒற்றை காட்டு யானை வெளியேறியது. இதனை கண்ட சண்முகம், தப்பிக்க முயன்றார். இதில் கால் இடறி விழுந்ததில் காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்ட சக பணியாளர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் பயத்தில் அவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் ஒற்றை காட்டு யானையை விரட்ட சம்பவ இடத்திற்கு வனத்துறை ரேஞ்சர் திருமுருகன், வனத்துறை உதவி ஆய்வாளர் ஐயப்பன், உள்ளிட்ட வனத்துறை குழுவினர் யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் ட்ரோன் உதவியுடன் யானை எங்கு உள்ளது என தேடினர். பட்டாசுகள் வெடித்தும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஆர்.எஸ் புரம் உதவி ஆணையர் ரவிக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இச்சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மேலும் வடவள்ளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“