ஓட்டலில் ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினர் என்ன சாப்பிட்டார் என்பதை எல்லாம் பொது வெளியில் பகிர்வது சரியா? அவர் சொன்னது போல நான் அன்னபூர்ணாவில் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை என தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்டது சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீனிவாசன் தான் நேரம் கேட்டார், அவரை யாரும் மிரட்டவில்லை என்று கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விளக்கம் அளித்து உள்ளார்.
கோவையில் சிறு, குறு தொழில் முனைவோர்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் சந்தித்துப் பேசினார். அப்போது அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் பேசுகையில், “ஒவ்வொரு பொருட்களுக்கும் வித விதமாக ஜி.எஸ்.டி போட்டு தருவது பிரச்சனையாக உள்ளது. பன்னிற்கு ஜி.எஸ்.டி கிடையாது. அதில் கிரீம் வைத்தால் 18 சதவீதம் ஜி.எஸ்.டி வருகிறது. ஜி.எஸ்.டி போடுவதில் கணினியே திணறுகிறது. வானதி கூட எங்கள் கடையில் சாப்பிட்டுவிட்டு, வரி குறித்து கேட்டு இருக்கிறார் என அமைச்சரிடம் தெரிவித்தார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இதை தொடர்ந்து அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நேரில் மன்னிப்பு கோரினார்.
இதுதொடர்பாக வெளியான வீடியோவில், நான் எந்தக் கட்சியிலும் இல்லை, தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். பொதுவாகத் தான் கேள்வியை முன் வைத்தேன். அது சர்ச்சையாகும் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறி இருந்தார். இது தொடர்பான வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடந்த சம்பவம் குறித்து கோவையில், வானதி சீனிவாசன் விளக்கம் அளித்தார். அப்பொழுது பேசிய வானதி, “தனது ஓட்டலில் ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினர் என்ன சாப்பிட்டார் என்பதை எல்லாம் பொது வெளியில் பகிர்வது சரியா? அவர் சொன்னது போல நான் அன்னபூர்ணாவில் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை. பேசும்போது நான் சாப்பிடாததை எல்லாம் அவர் கூறினார். அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீனிவாசன்தான் நேரம் கேட்டார். அவரை யாரும் மிரட்டவில்லை. வேண்டுமெனில் அவரையே நீங்கள் நேரடியாகக் கேட்கலாம்” என்று தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.