நாடு முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதன் ஒரு பகுதியாக கோவை வடகோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
இதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து வானதி சீனிவாசன் பேட்டியளித்தார். அப்போது பேசிய வானதி சீனிவாசன், பிரதமர் உரையில் இருந்த அம்சங்களை குறிப்பிட்டு பேசினார், பின்னர் கோவை வடக்கு ரயில் நிலைய மேம்பாடு, மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது எனவும், அது நிறைவேற துவங்கி உள்ளது எனவும் தெரிவித்தார்.
இங்கே உட்காரும் வசதி, லிப்ட் வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் என 12 கோடி மதிப்பீட்டில் வசதிகள் செய்யப்படுகிறது எனவும், இதனால் நெருக்கடிகள் குறைக்கப்படும், நீண்ட காலமாக இருந்த கோரிக்கைகள் நிறைவேற்றபட்டு இருப்பதற்கு நன்றி எனவும் தெரிவித்தார்.
என்னென்ன அடிப்படை வசதிகள் தேவைபடுகின்றதோ அது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தப்படும் எனவும், ராணி கமலாவதி ரயில் நிலையம் போல கோவை ரயில் நிலையம் மேம்படுத்தபடும் எனவும் தெரிவித்தார்.
கோவை தெற்கு சட்டமன்ற அலுவலக ஐ.எஸ்.ஓ சான்றிதழ் சர்ச்சைக்குள்ளானது தொடர்பாக எழுப்பபட்ட கேள்விக்கு, தானும் அதை பார்த்தாகவும், எந்த ஐ.எஸ்.ஓ நிறுவனம் தகுதியாக இருக்கின்றதோ அந்த நிறுவனத்தை எனது அலுவலகத்திற்கு அனுப்புங்கள் எனவும் தெரிவித்தார்.
ரயில் நிலையங்களில் ஒவ்வொரு கட்டமாக பணிகளை செய்து கொண்டு இருக்கின்றோம் எனவும், தேர்தலுக்காக செய்யவில்லை எனவும் தெரிவித்த அவர், பா.ஜ.கவில் பிற அரசியல் கட்சியினர் இணைவதற்கு பின்னணியில் பண பேரம் நடைபெறுவதாக கூறப்படுகின்றது என்பதை மறுத்தார். கட்சி கொள்கைகளை பிடித்து, உன்னதமான உணர்வோடு இணைகின்றனர் எனவும், இதை பொறுக்க முடியாமல் பணபேரம் என்று சொல்கின்றனர் எனவும் வானதி பதில் அளித்தார்.
மற்ற கட்சியினரை இழுக்குறோம் என்றால் அவர்கள் விருப்பம் இல்லை என்றால் வர முடியாதே என தெரிவித்த வானதி, அடுத்து பா.ஜ.க ஆட்சிதான் அமைகின்றது என்பதை உணர்த்து இருக்கின்றனர் எனவும், இதில் இணைந்தால் அரசியல் லட்சியங்களை நிறைவேற்ற முடியும் என்பதால் இணைகின்றனர் எனவும் தெரிவித்தார்.
பா.ஜ.க.,வில் யார் இணைகின்றார், அவர் எத்தனை அடி உயரம் என்பதெல்லாம் இன்னும் 4 மணி நேரத்தில் தெரிந்து விடும், ஊடகங்கள் இல்லாமல் யாரையும் இணைக்க மாட்டோம் என தெரிவித்த அவர், இன்னும் 4 மணி நேரத்தில் தெரிந்துவிடும் என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த விஜயதரணிக்கு உழைப்பு, திறமை அடிப்படையில் அங்கீகாரம் கிடைக்கும் எனவும், மக்கள் பிரதிநிதியாக இருந்து மன அழுத்தம், உட்கட்சி பிரச்சினை போன்ற காரணங்களால் இங்கே வந்திருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
பா.ஜ.க.,வை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தாலும், நாளை பா.ஜ.கவில் இணைந்தால் தேசியத்திற்காக இணைத்து பணியாற்றுவோம் எனவும் தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பாக கட்சி என்ன முடிவு எடுக்கின்றதோ அதற்கு உடன்படுவதாகவும், வானதி சீனிவாசன் போட்டியிடுகின்றாரா இல்லையா என்பதற்குள் போகவில்லை எனவும் தெரிவித்தார்.
மோடி வருகையால் பா.ஜ.கவினர் பயங்கர உற்சாகத்துடன் இருக்கின்றனர், இப்பவே கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வர துவங்கி விட்டனர் எனவும் தெரிவித்தார்.
பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி, பலூன் காட்டியவர்கள் இன்று வரவேற்பு தெரிவித்து கொண்டு இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
மதுரை எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு, பல முறை பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் பதில் சொல்லி இருக்கின்றோம் எனவும் தெரிவித்த அவர், ஒரு செங்கல்லை வைத்து 3 வருடமாக சுற்றி கொண்டு இருந்தவர்கள் ஏன் எய்ம்ஸ்க்கு எதுவும் செய்யவில்லை எனவும் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.