'ப்ரோ' என்று விஜய் பாணியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த வானதி சீனிவாசன்

தனியார் பள்ளி மாணவர்கள் மூன்று மொழிகளை கற்று வருகின்றனர். அந்த வாய்ப்பு அரசாங்க பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது தான் பா.ஜ.க.,வின் நிலைப்பாடு – பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

author-image
WebDesk
New Update
Vanathi srinivasan valam

கோவை காந்திபுரம் ராம்நகர் பகுதியில் மக்கள் சேவை மையத்தின் வளம் என்கின்ற திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான நிதி மேலாண்மை பயிற்சி முகாம் இன்று நடைபெறுகிறது.

Advertisment

முன்னதாக இதில் கலந்து கொண்ட வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய வானதி சீனிவாசன், கோவை மக்கள் சேவை மையத்தின் சார்பாக தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மகளிர்களுக்காக வளம் என்கின்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக சுய உதவி குழுக்களை உருவாக்குவது அவர்களுக்கு அரசாங்கத் திட்டத்தின் பலன்கள் பெற்று கொடுத்து தொழில் முனைவோர்களாக ஆக்குவது ஆகியவை இத்திட்டத்தின் நோக்கம். நிதி மேலாண்மையில் ஒவ்வொரு பெண்களுக்கும் வங்கி கணக்குகளை துவக்கி அவர்களை பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்றவர்களாக மாற்ற வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் உயர்ந்த லட்சியம்.

இந்த நிகழ்வில் ஏழை எளிய குடும்பத்தை சார்ந்த பெண்கள் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் அவர்கள் சொந்தத் தொழில் துவங்க உதவி செய்யப்படுகிறது. சமுதாய முழுமைக்கும் பெண்கள் இளைஞர்கள் யாராக இருந்தாலும் ஒவ்வொருவரின் நலன் மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசாங்கத்துறையில் பல்வேறு மாற்றங்களை பிரதமர் கொண்டு வந்துள்ளார். இந்தியாவை வல்லரசு ஆக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மத்திய அரசு மாறி வருகின்ற உலக சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல்வேறு கொள்கை முடிவுகள் வரை பெரிய மாற்றத்தை அமல்படுத்தி வருகிறார். 

Advertisment
Advertisements

புதிய கல்வி கொள்கை வாயிலாக நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியான தரத்துடன் கூடிய கல்வியை படிக்க வேண்டும். இந்திய நாடு பல்வேறு மொழிகளை பேசக்கூடிய நாடு என்பதால் இங்கு குழந்தைகளுக்கு மூன்று மொழிகளை கற்றுத் தர வேண்டும் என்று பிரதமர் கல்வித்துறை வாயிலாக மாற்றத்தை கொண்டுவர நினைக்கிறார். அதே சமயம் இது புதிதான மாற்றம் அல்ல. முதல்முறையாக மூன்றாவது மொழியை தமிழக மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதும் அல்ல. ஏற்கனவே தனியார் பள்ளிகளில் வசதி வாய்ந்த பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுக்கு இது போன்ற வாய்ப்புகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அத்தகைய இந்த சூழலில் அரசாங்க பள்ளி மாணவர்கள் மட்டும் இரண்டு மொழிகளை படிக்கின்றனர். எனவே அரசாங்க பள்ளி மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பினை ஏற்படுத்தி தரவேண்டும். ஹிந்தி என்பது கட்டாயம் அல்ல. திராவிட முன்னேற்றக் கழகம் அரசு மீண்டும் ஒரு மொழிப்போர் என்று கூறி மக்களை திசை திருப்ப முயல்கிறது. ஹிந்தி என்பது இங்கு கட்டாயம் அல்ல ஆனால் மொழி திணிக்கப்படுவதாக ஒரு தோற்றத்தை முதலமைச்சரும் மற்ற தலைவர்களும் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். தனியார் பள்ளி மாணவர்கள் மூன்று மொழிகளை கற்று வருகின்றனர். அந்த வாய்ப்பு அரசாங்க பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது தான் பா.ஜ.க.,வின் நிலைப்பாடு.

தொகுதி வரையறை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் என்று ஒரு நாடகத்தை நடத்துவதற்கு மாநிலத்தின் முதலமைச்சர் தயாராகி கொண்டிருக்கிறார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் கோவையில் பேசுகின்ற பொழுது அவர்கள் குறிப்பிடுவது போல் எந்த ஒரு வரையறையும் இல்லை. ஒரு பொழுதும் தமிழகத்திற்கும் மற்ற மாநிலங்களிலும் எம்.பி.,க்களின் எண்ணிக்கை குறையாது என்ற உறுதிமொழியை கொடுத்திருக்கிறார். இதற்குப் பின்னரும் அனைத்து கட்சி கூட்டம் என்கின்ற பெயரில் ஏதோ ஒரு அணியில் அவர் பின்னால் அனைவரும் நிற்பது போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக முதல்வர் எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தொகுதி வரையறை என்ற ஒரு பூச்சாண்டியை காட்டுவதற்கு முயற்சி செய்கிறார். 

முதலமைச்சர் அவரது அரசாங்கத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனையின் தோல்விகளை மறைப்பதற்காகவும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தொல்லைகளை மறைப்பதற்காகவும் தொகுதி வரையறை, இந்தி திணிப்பு போன்ற பழைய நாடகங்களை கையில் எடுத்துள்ளார்.  தமிழக மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள். உண்மை ஒருபோதும் மறையாது. பா.ஜ.க இத்தனை விஷயங்களையும் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு தயாராக உள்ளது.
தி.மு.க.,வில் அவர்களுடைய பாரம்பரியம் என்னவென்றால் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக பேசுவது தான். இந்திய காவல் பணியில் நல்ல பெயர் எடுத்தவர் அண்ணாமலை. அரசு உயர் பதவியில் தகுதி வாய்ந்த இடத்தில் இருக்கக்கூடிய தேசியக் கட்சியின் மாநில தலைவரை பார்த்து இதுபோன்று தரம் தாழ்ந்த விமர்சனங்களை இவர்கள் வைக்கிறார்கள் என்றால் அவர்களுடைய தரம் அவ்வளவுதான் என்று வானதி சீனிவாசன் கூறினார்.

தமிழக வெற்றிக்கழகம் இரண்டாம் ஆண்டு கூட்டத்தில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், அரசியல் கட்சியை விஜய் தற்பொழுதுதான் துவங்கி நடத்திக் கொண்டிருக்கிறார். வரக்கூடிய காலங்களில் அரசியலில் பத்திரிகையாளர்களும் ஒரு அங்கம் என்பதை அவர்கள் புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என்று கூறினார். 

சமீப நாட்களாக விஜய், அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ் ஆகியோரெல்லாம் ப்ரோ என்ற வார்த்தையை பயன்படுத்துவது குறித்தான கேள்விக்கு "ப்ரோ அதற்கு அவர்கள் ஆன்சர் செய்வார்கள் ப்ரோ" என வானதி சீனிவாசன் பதிலளித்தார்.

பி.ரஹ்மான், கோவை 

Vanathi Srinivasan kovai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: