கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் நள்ளிரவு நேரத்தில் உலா வந்த முகமூடி அணிந்த நபர்கள், எலக்ட்ரிக் நிறுவனத்தில் சாவகாசமாக திருட முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை சின்னவேடம்பட்டி அத்திப்பாளையம் பகுதியில் "இயோடோம் எலக்ட்ரிக்" எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த
சத்தியமூர்த்தி மேலாளராக ஐந்து ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். வழக்கமாக இரவு 7:00 மணிக்கு நிறுவனம் மூடப்பட்டு காலை 9 மணிக்கு நிறுவனம் திறக்கப்படும் நிலையில் இன்று காலை வழக்கம்போல் நிறுவனத்துக்கு வந்து திறந்த சத்தியமூர்த்தி சிசிடிவி கேமராக்கள் திரும்பி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து சி.சி.டி.வி காமிரா காட்சிகளை சோதனை செய்த போது நள்ளிரவு 1.30 மணியளவில் முகமூடி அணிந்திருந்த இரண்டு நபர்கள் சுவர் ஏறி குதித்து நிறுவனத்திற்குள் புகுந்து சுமார் 2"லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருட முயன்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சத்தியமூர்த்தி தனது புகாரில் "முகமூடி அணிந்த நபர்கள் தங்களது நிறுவனத்தில் திருட முடியாமல் சென்றுள்ளார்கள் எனவும் கேட்டை வளைத்துள்ளதாகவும், ஆகவே திருட முயற்சி செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்வதோடு, தங்கள் நிறுவனம் இருக்கும் பகுதிக்கு இரவு ரோந்து வர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள சரவணம்பட்டி போலீசார் நள்ளிரவில் முகமூடி அணிந்து கொண்டு கொள்ளை அடிக்க முயன்ற திருடர்களை தேடி வருகின்றனர்.