கோவையில் 100 சதவீத வாக்குப்பதிவு எட்டுவதற்கான நடமாடும் தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் விதமாக நடமாடும் தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று துவக்கி வைத்தார்.
செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நடமாடும் வாகனத்தின் மூலம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், தேர்தலில் நேர்மையாக வாக்களிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காணொளிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த வாகனம் நகரப் பகுதி மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளின் முக்கிய இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவினை உறுதி செய்யும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக முதல் முறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்வி நிறுவனங்களோடு இணைந்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், ஊரகப் பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடமாடும் தேர்தல் விழிப்புணர்வு வாகனம் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், இதன் மூலம் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவினை எட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நகரப் பகுதிகளில் வாக்குப்பதிவினை அதிகரிக்கும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்து அடுக்குமாடி குடியிருப்புகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு காணொளி நடமாடும் வாகனம் மட்டுமின்றி நகரப் பகுதியில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி திரைகளிலும் ஒளிபரப்பப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“