கோவை உக்கடம் பெரியகுளத்தில் மின்உற்பத்திக்கு ரூ.1.1 கோடியில் 140 கிலோவாட் திறன்கொண்ட சோலார் பேனல் பொருத்தும் பணி துவங்கியது.
கோவை மாநகராட்சி சார்பில் உக்கடம் பெரியகுளத்தில் ரூ.1.1 கோடி மதிப்பீட்டில் 140 கிலோவாட் திறன் கொண்ட மிதக்கும் சோலார் பேனல் மின்உற்பத்தி நிலையம் அமைக்க கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது.
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த குழுவுடன் இணைந்து இத்திட்டத்தை துவக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவுசெய்தது. அதன்படி கடந்த 2023 பிப்ரவரி 2 ஆம் தேதி சுவிஸ் வளர்ச்சி நிறுவன உதவி இயக்குனர் தூதா கிறிஸ்டியன், ப்ரூடிகர் ஆகியோரது தலைமையிலான குழுவினர், கோவை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து, உக்கடம் குளத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இக்குழுவினர், இந்தியா முழுவதும் ஆய்வு மேற்கொண்டு 8 நகரங்களை தேர்வுசெய்தனர். அதில் தமிழ்நாட்டில், கோவை, திருச்சி மற்றும் நெல்லை ஆகிய நகரங்களை தேர்வு செய்தனர்.
கோவையில் இந்நிறுவனம் 50 சதவீதம் நிதியுதவி அளித்து, இத்திட்டத்தை துவக்குகிறது. அதன்படி, இத்திட்டத்தின் கீழ் உக்கடம் குளத்தில் மிதக்கும் சோலார் பேனல் பொருத்தும் பணி நேற்று துவங்கியது.
இப்பணி, விரைவில் நிறைவுபெறும். அடுத்த கட்டமாக மின்உற்பத்தி துவங்கப்பட்டு உற்பத்தியாகும் மின்சாரம், மாநகராட்சி நிர்வாக பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என இத்திட்ட பொறியாளர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“