கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தீபாவளி போனஸாக ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று மாலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டமானது அதிகார குரல் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் சுமார் 30க்கும் குறைவானோர் மட்டுமே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் இரண்டாவது நாளான இன்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்கள் மாநகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து இதற்கு ஒரு தீர்வு தெரிந்து கொண்டு தான் செல்வோம் என கூறியுள்ளனர்.
போனஸ் என்று கூறி 2000 ரூபாய் தான் தருவதாகவும் இது எப்படி போதும் என கேள்வி எழுப்பியுள்ள ஒப்பந்த ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தை தங்களுக்கு போனசாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே மாநகராட்சி துணை ஆணையாளர் சிவக்குமார் ஒப்பந்த ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் தங்களுக்கு ஒரு மாத சம்பளத்தை போனசாக வழங்கினால் தான் இங்கிருந்து செல்வோம் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“