கோவை மாநகராட்சி 97வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நிவேதா தொடர்ந்து மூன்று மாநகராட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாததை அடுத்து தகுதி இழக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
மாநகராட்சி மாமன்ற கூட்டங்கள் மாநகராட்சி நிர்வாக அறிவிப்பின்படி நடைபெறும். இதில் தொடர்ந்து மூன்று கூட்டங்களில் பங்கேற்கவில்லை எனில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(1)இன் படி உள்ளாட்சி பதவி பறிபோகும். பிறகு அடுத்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(4) இன் படி சம்பந்தப்பட்ட நபர் கூட்டங்களில் பங்கேற்காதது குறித்து காரணம் ஏதாவது தெரிவித்து இருந்தால் மாநகராட்சி ஆணையாளர் அதனை வெளியிடுவார்.
அக்காரணத்தை தொடர்ந்து தகுதி இழந்தவர்கள் மீண்டும் தொடர்வது குறித்து மாமன்ற கூட்டம் முடிவு செய்யும். இந்நிலையில் கோவை மாநகராட்சியில் 97வது வார்டு திமுக பெண் கவுன்சிலரான நிவேதா கடந்த ஜனவரி, மார்ச், மே ஆகிய மூன்று மாதங்களில் நடைபெற்ற கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்காததை தொடர்ந்து இன்று முதல் தகுதி இழக்கின்றார் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இது குறித்து மாநகராட்சி தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டு, நிவேதா காரணம் ஏதாவது தெரிவித்தால் அதனை மாநகராட்சி ஆணையாளர் அடுத்த கூட்டத்தில் வெளியிடுவார்.
அதனையடுத்து அவர் மீண்டும் பதவியில் தொடர்வது குறித்து மாமன்ற கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். நிவேதா கோவை மாநகராட்சி மன்ற உறுப்பினர்களிலேயே இளம் பெண் மாமன்ற உறுப்பினர் என்பதும் முன்னாள் திமுக கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“