கோவை மாவட்டம் இருகூரில் இருந்து கர்நாடக மாநிலம் தேவனஹல்லி வரை பெட்ரோலிய எண்ணெய் குழாய் பதிப்பு திட்டத்திற்கு எதிராக அப்பகுதி விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் திட்டத்தை கைவிடக் கோரி பலமுறை அரசிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் சில விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் அந்த எண்ணெய் குழாய் பதிப்பிற்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
இந்நிலையில் நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் நடத்த உள்ளதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து இன்று நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க உள்ளனர்.
இதுகுறித்து பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணைச் செயலாளர் கணேசன், ”இது சம்பந்தமாக அமைச்சர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியும் தீர்வு எட்டாத நிலையில் போராட்டம் நடத்தினோம். அப்போதெல்லாம் தினமும் கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டனர்.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். மேலும் ஏற்கனவே விவசாயிகளிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமலும் கருத்து கேட்காமலும் இந்த திட்டத்தை துவக்கி உள்ளனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழாய் பதிப்பிற்கு மட்டுமே அனுமதி கையெழுத்திட்டதாகவும் ஆனால் தற்பொழுது புதிதாக போடப்படும் குழாய்களுக்கு எந்த ஒரு அனுமதியும் பெறவில்லை,” என்று தெரிவித்தார்.
பி.ரஹ்மான் கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“