கோவையில் உள்ள உணவகங்களில் இன்று உணவு பாதுகாப்பு துறை நடத்திய அதிரடி சோதனையில் 35 கிலோவிற்கும் அதிமான கோழி இறைச்சி, சவர்மா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் ஹோட்டல் ஒன்றில் சவர்மா சாப்பிட்ட 13 வயது மாணவி உயிரிழந்தார். மேலும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாநிலம் முழுவதும் உணவகங்களில் சோதனை நடத்திட சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக இன்று கோவையிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
உக்கடம், கோட்டைமேடு, காந்திபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் 40 கடைகளுக்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது கடையில் பயன்படுத்தப்படும் கோழி இறைச்சி, சவர்மா சிக்கன் மற்றும் மட்டன் தொடர்பான பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் பயன்படுத்த தகுதி இல்லாத 4.5 கிலோ சவர்மா சிக்கன் மற்றும் 12 கிலோ கோழி இறைச்சி உட்பட மொத்தம் 35 கிலோவிற்கும் அதிகமான இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனை இரவு வரை தொடர இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி உள்ளிட்டவை ஆய்வுக்கு அனுப்பப்பட இருப்பதாகவும், ஆய்வுக்குப் பின்னர் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்த கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“