சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், மருத்துவர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பினை வழங்க கோரியும் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள், 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள டீன் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு பாதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு எதிராகவும், மருத்துவர்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்திட கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
மருத்துவர்களின் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக புற நோயாளிகள் பிரிவு மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர சிகிச்சை மற்றும் அத்தியாவசியமான அறுவை சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“