இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதில் காசா உட்பட பாலஸ்தீனத்தின் பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன. அப்பாவி பொதுமக்கள் பலியாகி வர கூடிய நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் கோவையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், ஜமாத்கள் மற்றும் அரசியல் இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
அப்பொழுது இந்திய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது எனவும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தனது செயல்பாடுகளை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தபட்டது. பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை தவிர அனைத்து தரப்பினரும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை பீக் ஹவரில் ஊர்வலம் செல்ல அனுமதிக்கும் போலீசார், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்லாமியர்கள் பேரணி செல்ல விடாமல் அனுமதி மறுப்பதாகவும், இதை தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக வள்ளியம்மை பேக்கரி முன்பாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“