தேர்தல் வரவிருப்பதால் தவறான தகவலின் அடிப்படையில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியிருக்கலாம் என பிரபல நிறுவனமான மார்ட்டின் குழும நிறுவனங்களின் இயக்குநர் லீமாரோஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
பிரபல லாட்டரி அதிபரும் மார்ட்டின் குழும நிறுவனங்களின் தலைவருமான மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். கோவை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் மார்ட்டின் குழும நிறுவனங்களின் தலைமை அலுவலகம் ஆகிய இடங்களில் ஐந்து நாட்களாக நடைபெற்ற சோதனை இன்று காலை நிறைவடைந்தது.
இந்த நிலையில், சோதனை தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை மார்ட்டின் குழும நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனை மேற்குவங்க வருமான வரித்துறையினரால் நடத்தப்பட்ட சோதனை. ஆனால், அமலாக்கத்துறை சோதனை என தவறாக பரப்பப்பட்டு வருகிறது. பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்திவரும் நிலையில் தங்கள் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனை அமலாக்கத்துறை சோதனை என பரப்பப்படுவது கண்டிக்கத்தக்கது.
இதுவரை சரியான முறையில் வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி போன்றவை தங்கள் நிறுவனம் சார்பில் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 1985-86 ஆம் ஆண்டு முதல் 2022-2023 ஆம் நிதியாண்டு வரை 600 கோடி வருமான வரியாக அரசுக்கு செலுத்தியுள்ளோம். நாட்டிலேயே அதிக அளவிலான வருமான வரி செலுத்தியது தங்கள் நிறுவனம்தான். இவ்வாறு அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/5e82b005-105.jpg)
இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அந்நிறுவன இயக்குனரும் தொழிலதிபர் மார்ட்டின் மனைவியுமான லீமா ரோஸ் மார்ட்டின், இந்த சோதனை வழக்கமான சோதனை தான். எந்தவித தகவலும் அளிக்காமல் அதிகாரிகள் திடீரென எங்கள் வீட்டிற்கு வந்து கணவர் மார்ட்டின் அறையில் இருக்கும் போதே சோதனையில் ஈடுபட்டனர்.
இரண்டு நாட்கள் மட்டும் சோதனை இருக்கும் என தெரிவித்த நிலையில் ஐந்து நாட்கள் இந்த சோதனை நீடித்தது. சோதனைக்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைத்தோம். சோதனையில் எந்தவித ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை.
தேர்தல் நெருங்கும் சூழலில் தவறான தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றிருக்கலாம் என கருதுகிறோம். மேற்குவங்க மாநில வருமான வரித்துறையினர்தான் இந்த சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் அமலாக்க துறை சோதனை என தவறாக செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது, என்று கூறினார்.
மேலும், கோவை மாநகர பகுதிகளில் ஆர்ஃபிசியல் இண்டலிஜென்ஸ் தொழில் நுட்பத்துடனான கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ மார்ட்டின் குழுமம் சார்பில் ஏழரை கோடி ரூபாய் வழங்க இருப்பதாகவும் இதன் மூலம் 248 மீட்டர் தூரத்திற்கு கேமராக்கள் நிறுவப்பட இருப்பதாகவும் லீமாரோஸ் மார்ட்டின் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“