/indian-express-tamil/media/media_files/2025/01/23/ExURrLAgbZ1By912u90f.jpg)
கோவையில் யானை தாக்கி நடை பயிற்சிக்குச் சென்ற முதியவர் உயிரிழந்த விவகாரத்தில், உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் திரண்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
கோவை புறநகர் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு உள்ள காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்த வனத் துறையினரும் குழுக்கள் அமைத்து ஊருக்குள் வராமல் விரட்டி வருகின்றனர். மீண்டும், மீண்டும் ஊருக்குள்ளும், விவசாய நிலங்களுக்குள் நுழையும் யானைகள் உணவு தேடி ஆக்ரோஷமாக சுற்றி தெரிகிறது. அதனை தடுக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை தாக்கி உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது .
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியநாயக்கன் பாளையம் பழைய புதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி வேலுமணி என்பவரை யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று தடாகத்தில் இருந்து துடியலூர் செல்லும் சாலையில் உள்ள தாளியூர் கிராமத்தில் நடை பயிற்சிக்குச் சென்ற நடராஜ் என்பவரை அங்கு வந்த ஒற்றைக் காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் தடாகம் காவல் துறையினர் மற்றும் கோவை சரக வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்கு கூடிய அப்பகுதி பொதுமக்கள் அவரின் உடலை எடுக்க விடாமல் தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், ஆக்ரோசமாக சுற்றி தெரியும் அந்த ஒற்றை காட்டு யானை தாக்கி உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து வருவதால், அந்த ஒற்றைக் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட வேண்டும் என்றும் வலியுறுத்தி தற்போது போராட்டத்தில் ஈடுபடுவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தகவல் அறிந்து அங்கு வந்த அப்பகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, அங்கு உள்ள வனத் துறைரிடம் பேசி வருகிறார். இதனால் அப்பகுதியில் தற்பொழுது பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.