”மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் எந்த பிரச்சினையும் இல்லை. அக்காவும் தம்பியுமாக ஒற்றுமையாக இருந்து கட்சியை வளர்த்து வருகிறோம்” என பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் துளிர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கல்யாண மேடைகளை எதிர்க்கட்சிகளைத் திட்ட தமிழக முதல்வர் பயன்படுத்துகிறார். பிரதமர் மோடியின் மீது விமர்சனம் வைத்துள்ளார். ஆட்சிக்கு ஆபத்து வந்தால் கூட பரவாயில்லை என முதல்வர் பேசியிருக்கிறார். அப்படி ஒரு சூழல் தமிழகத்தில் நடக்கும் என்கிற பயம் வந்துவிட்டதா?
இதையும் படியுங்கள்: நீண்ட ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும் : தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் போராட்டம்
எந்த ஒரு மாநில அரசையும் ஜனநாயகத்திற்கு விரோதமாக கலைக்க பா.ஜ.க.,வுக்கு விருப்பமில்லை. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதற்கு பிரதமர் மோடி எரிச்சல் அடைந்திருக்கிறார் என முதல்வர் கூறியுள்ளார். மோடி பயப்படுகிறார் என முதல்வர் சொல்வது, அவரின் கற்பனை. முதல்வர் தனது கற்பனை உலகத்தில் இருந்து வெளி வந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகளை கவனிக்க வேண்டும். மணல் கடத்தல், மது கடத்தல், டாஸ்மாக் பிரச்சினை, சட்டம், ஒழுங்கு, லஞ்சம், ஊழல் போன்றவற்றை முதல்வர் சிந்திக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கும் போது பிரதமர் மோடி தன்னை பார்த்து பயப்படுகிறார் என பேசுவது போல் மாநிலத்தின் பிரச்சினைகளை முதல்வர் மூடி மறைக்க நினைக்கிறார்.
தமிழக ஆளுனர் குறித்து குடியரசு தலைவருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருப்பது முழுவதும் கற்பனை மற்றும் உண்மையில்லாத விஷயங்கள். மாநிலத்தின் வரலாற்றை, நாட்டின் கலாச்சார பதிவுகளை, பண்பாட்டு தளங்களை பற்றி மாணவர்களிடமும், பொது வெளியிலும் கவர்னர் பேசுகிறார் , இது எந்த விதத்தில் சிக்கலை உருவாக்குகிறது? ஒரு கற்பனை கோட்டையை கட்டிக்கொண்டு யாரும் மாற்றுக்கருத்தை பேசக்கூடாது என்ற சர்வாதிகாரத்திற்குள் செல்கிறீர்களா? ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஆளுநர் உரிய பதில் கொடுப்பதால் முதல்வருக்கு கோபம் வருகிறது.
மேலும், மேடை நாகரிகம் தெரியாமல் பேசக்கூடியவர்கள் தான் திராவிட தலைவர்கள். ஆளுநர்கள் அரசியல் பேசுவது என்பது வரம்பை மீறி போவதில்லை. ஆளுநர் குறித்து பேசி சிக்கலான நெருக்கடிகளை தி.மு.க உருவாக்குகிறது. தி.மு.க,வினர் பெண்களை எவ்வளவு இழிவாக கேவலமாக பேசுவார்கள் என்பது நாடறிந்ததுதான். நான் மேடையில் பேசியதை வைத்து என்னை முடக்கிவிடலாம் என நினைத்தால் அது நடக்காது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.,வும் இம்மாதிரியான பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது என்று சொல்லிக் கொடுத்துள்ளார்கள், என்று கூறினார்.
அப்போது அண்ணாமலைக்கும் உங்களுக்கும் பிரச்சனையா, அவர் கோவை வரும்போது நீங்கள் இங்கு இருப்பதில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, இப்படி ஒரு புது கதையை உருவாக்குகிறீர்களா என பயங்கரமாக சிரித்தபடி கூறினார் வானதி சீனிவாசன். மேலும், ”அதில் எந்த உண்மையும் இல்லை. கட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றாகவே கலந்துக் கொள்கிறோம். அண்ணாமலைக்கும் எனக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. அவர் மாநில அரசியலிலும் நான் தேசிய அரசியலிலும் பரபரப்பாக இயங்குகிறோம். தேசிய அரசியலில் இருப்பதால் கோவைக்கு அவர் வரும் போது, இல்லாமல் இருப்பதை போன்ற சூழல் உள்ளது. அதனால் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத சூழல். இருவரும் அடுத்து ஒரே கூட்டத்தில் பங்கேற்பதை போல திட்டமிடுகின்றோம். மற்றப்படி அக்காவும் தம்பியுமாக ஒன்றிணைந்து கட்சியை வளர்த்து வருகிறோம். கோயம்புத்தூரில் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் வேட்பாளர் யார் என்று தேசிய தலைமை முடிவெடுக்கும்” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil