/tamil-ie/media/media_files/uploads/2023/06/Kovai-Motor-association.jpeg)
கோவை மோட்டார் போக்குவரத்து சம்மேளன நிர்வாகிகள்
தமிழகத்தில் கல் மற்றும் மணல் குவாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து சம்மேளன நிர்வாகிகள், கல் குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதல்வரின் குடும்பத்தினருடன் தொடர்புடைய நிறுவனங்களே காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கல் மற்றும் மணல் குவாரி உரிமையாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து சம்மேளன நிர்வாகிகள் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இதையும் படியுங்கள்: தமிழகம் முழுவதும் கல்குவாரி கிரசர்களில் ஜூன் 26 முதல் வேலை நிறுத்தம்
முன்னதாக பேசிய அவ்வமைப்பின் தலைவர் செல்ல ராஜாமணி கூறியதாவது, குவாரி உரிமையாளர்களின் இந்த வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் 50,000 லாரிகளுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் கல், மண், மணல் உள்ளிட்டவை இன்றியமையாத அத்தியாவசிய பொருளாக தற்போது மாறியுள்ளதாகவும் கூறினார்.
எம்.சாண்ட் ஏற்றிச் செல்லும் லாரிகள் இல்லாமல் கட்டுமான பணிகளில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், கனிம வளங்கள் எடுத்துச் செல்வதற்காகவே வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் பல்வேறு வகையில் இழப்புகள் ஏற்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/WhatsApp-Image-2023-06-27-at-17.51.46-1.jpeg)
மாநிலம் முழுவதும் விதிகளை மீறி இயங்கும் குவாரிகளை மூட வேண்டும் எனவும், தமிழகத்தில் 450 குவாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ள நிலையில் 3000 க்கும் மேற்பட்ட குவாரிகள் அனுமதி பெறாமல் இயங்கி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் அனுமதி இன்றி குவாரிகள் செயல்பட்டு கனிம வள கடத்தல்கள் நடைபெறுவதற்கு அரசு அதிகாரிகளே காரணம் என்றும், மாதம் ஒருமுறை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறியதுடன் கனிமவளத்துறை அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், கோவை, நெல்லை ,கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளில் தினசரி கனிம வளங்கள் கேரளா மற்றும் கர்நாடகாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கனிம வள கொள்ளைக்காக பயன்படுத்தப்படும் லாரிகளுக்கு மொத்தமாக லஞ்சம் பெறும் அதிகாரிகள், அந்த வாகனங்கள் அதிக பாரம் ஏற்றி சென்றாலும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், ஆனால் தமிழக பதிவெண் கொண்ட லாரிகளில் ஒரு யூனிட் அளவிற்கு அதிகாரம் ஏற்றினாலும் அபராதம் விதித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், கனிமவளத்துறை அதிகாரிகள் கண்துடைப்புக்காக மட்டுமே பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும், அரசே பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதேபோல் தமிழக முதல்வரின் குடும்பத்தினருடன் நெருக்கமான தொடர்புடைய நிறுவனங்களே இந்த கனிமவள கொள்ளை போன்ற முறைகேடுகளுக்கு காரணம் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.