கோவை மதுக்கரை சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால் மஞ்சப்பள்ளம் குறுக்கே இருந்த தரைபாலம் உடைந்து இளைஞர் வெள்ளநீரில் சிக்கினர்.
கோவையில் கடந்த நான்கு நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை நேரங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதில் சுந்தராபுரம்,மாச்சம்பாளையம், பிள்ளையார்புரம், மதுக்கரை பகுதியில் பெய்த தொடர் கனமழையால் மதுக்கரை, வேலந்தாவளம் வழியாக கேரளா செல்லும் மஞ்சப்பள்ளம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் மதுக்கரை ஆற்று விநாயகர் கோவில் அருகே ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலத்திற்கு 4 அடிக்கு மேல் வெள்ள நீர் சென்ற நிலையில், தரைபாலத்தின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
அப்போது அவ்வழியாக பணிக்குச் சென்று இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய வீரப்பனூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் வண்டியுடன் வெள்ள நீரில் சிக்கினார். இதையடுத்து ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி கயிறு கட்டி 1 மணி நேரத்திற்கு மேல் போராடி மீட்டனர்.
மேலும் தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டதால் அவ்வழியாக முழுமையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டது. இதே போல் தொடர் கனமழையால் மதுக்கரை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்து அப்பகுதி வெள்ளக்காடாக காட்சியளித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“