கோவையில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை, நஞ்சுண்டாபுரம் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போத்தனூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்று காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் இருந்த இருவர் நோட்டு புத்தகங்களை கையில் வைத்துக் கொண்டு செல்போன் பார்த்தபடி குறிப்பு எடுத்துக் கொண்டு இருந்ததை பார்த்து காவல் துறையினர் சந்தேகம் அடைந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்பொழுது அவர்கள் முன்னுக்கு, பின் முரணாக பதில் அளித்து உள்ளனர்.
இதை அடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், கோவை, சுந்தராபுரம் பகுதி சேர்ந்த அஷ்ரப் அலி மற்றும் கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம் என்ற பெல்ட் இப்ராஹிம் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.