கோவை ஜி.வி.ரெசிடன்ஸி பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் காரில் வந்து செயின் பறிக்க முயன்ற இருவரை கைது செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
கோவை ஜி.வி.ரெசிடென்ஸி பகுதியில் நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட கௌசல்யா என்ற பெண்ணிடம், காரில் வந்த நபர்கள் தங்க செயினை பறிக்க முயன்றனர். அப்போது செயினை கௌசல்யா இறுக பிடித்து கொண்டதால் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு காரின் சக்கரம் அருகே விழுந்து மயிரிழையில் உயிர் தப்பினார். இந்த சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியான நிலையில், செயின் பறிப்பில் ஈடுபட முயன்ற நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இன்று காலை இருவரை கைது செய்தனர்.
இதையும் படியுங்கள்: கோவை தி.மு.க இளம் பெண் கவுன்சிலர் நிவேதா பதவிக்கு ஆபத்து: மாநகராட்சி முடிவு என்ன?
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் (25) மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த அபிஷேக் (29) ஆகிய இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து செயின் பறிப்பிற்கு பயன்படுத்தபட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக கோவை மாநகர காவல் துணை ஆணையர்கள் சண்முகம், சந்தீஸ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது விமான நிலையம் பின்புறம் இருந்து செயின் பறிக்க பயன்படுத்தபட்ட வாகனத்தை இன்று காலை மடக்கி பிடித்து இருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
இதில் அபிஷேக் குமார் மீது ஏற்கனவே இது போன்ற நகைப்பறிப்பு வழக்குகள் உள்ளது. அபிஷேக் குமார் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக பணியாற்றி வந்தவர். சக்திவேல் மீது எந்த வழக்கும் கிடையாது. இந்த காரின் உரிமையாளர் அவர்தான். பீளமேடு பகுதியில் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு 7 ஆண்டுகளாக நண்பர்களாக வசித்து வருகின்றனர்.
3 தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில், துரிதமாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பெண்ணிடம் திருட வேண்டும் என திட்டமிட்டு வரவில்லை. சக்திவேலுக்கு பணம் தேவை இருந்ததாக கூறியதால், அபிஷேக் நகைப்பறிக்க எண்ணி, சாலையில் செல்லும் யாரிடமாவது செயினை பறிக்க திட்டமிட்டு சென்ற போது ஏதேட்சையாக நடந்த சம்பவம் இது.
இந்த வாகனத்திற்கு நம்பர் பிளேட் இல்லை, இருப்பினும் காரில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் அடிப்படையில் தனிப்படைகள் பல இடங்களில் விசாரித்து வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். காவலர்களின் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் இந்த வழக்கில் ஈடுபட்டவர்களை விரைவாக பிடிக்க முடிந்தது.
கடந்த 2 மாதத்தில் காவல்துறையின் ரோந்து காரணமாக இருசக்கர வாகனத்தில் வந்து செயின் பறிக்கும் சம்பவம் வெகுவாக குறைந்துள்ளது. பொதுமக்கள் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும். சிசிடிவி கேமராக்கள் இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க பெரிதும் உதவியாக இருந்தது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil