பெற்றோர்களுடன் வாகனத்தில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் சாலை பாதுகாப்பு குறித்து தெரு கூத்து, பாடல், ஓவியம், என பல்வேறு வகையில் பள்ளி மாணவர்கள் தத்ரூபமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சாலை பாதுகாப்பு குறித்து கோவை மாநகர காவல்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள டிரினிட்டி பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஓவியம் மூலம் சாலை பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி தத்ரூபமாக வடிவமைத்து காட்சிபடுத்திருந்தனர். அதே போல மழலையர், குழந்தைகள் ஹெல்மெட், சீட்பெல்ட் அவசியம், குடி போதையிலும் செல்போன் பேசிக்கொண்டும் வாகனத்தை இயக்க கூடாது என்பது பற்றி தெரு கூத்து மற்றும் பாடல் வரிகள் மூலம் உறுதிமொழி எடுத்துக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகர காவல் போக்குவரத்து துணை ஆணையர் அசோக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.
தொடர்ந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ”சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகள் அனைவரும் பெற்றோர்களிடம் ஒரு மாத பாக்கெட் மணியை வாங்காமல், அதற்கு பதிலாக ஹெல்மெட் வாங்கி தரும்படி கேட்டு கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்ய வேண்டும். சாலை பாதுகாப்பில் பெற்றோர்களுக்கு பள்ளி குழந்தைகள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அதே போல சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி குழந்தைகளுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் கற்று கொடுப்பது அவசியம்” என தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“