கோவை மாநகர பகுதிகளில் 170 புகையிலை விற்கும் கடைகள் மூடப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Advertisment
இந்தியாவிலே முதன்முறையாக புற்றுநோய் விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய டிஜிட்டல் இன்போகிராபிக் இணைய வழி புத்தகத்தை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் பி.குகன் வெளியிட்டனர்.
நிகழ்வைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
Advertisment
Advertisements
புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருப்பது ஒரு புறம் இருந்தாலும் அதனை கட்டுபடுத்துவது என்பது சவாலான ஒன்றாக உள்ளது. மாநகரில் 2000 கிலோ வரையிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 275 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.
திரையரங்குகளில் ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு மக்கள் மனதில் அதிகம் பதிகிறது. ஆனால் புகையிலை பிடிப்பவர்கள் மத்தியில் தாக்கதை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் தற்போது அதிகளவில் பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் புழக்கம் உள்ளது வேதனைக்குரியது. இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை விட பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த விழிப்புணர்வு ஒரு ஓவியமாக அல்லது கார்ட்டூனாக கொண்டு வந்தால் அது விரைவில் பள்ளி மாணவர்களை சென்றடையும்.
மேலும் ஒருவர் குடிப்பதை பார்க்கும் போது தான் மற்றவர்களுக்கு அதனை பயன்படுத்த வேண்டுமென்ற ஆர்வம் தூண்டப்படுகிறது. மாநகர பகுதிகளில் புகையிலை விற்கும் 170 கடைகள் மூடப்பட்டுள்ளது. புதிதாக துவக்கபட்ட சுந்தராபுரம் காவல் நிலைய பகுதியில் 400 கிலோ புகையிலை பிடிக்கபட்டது. அது கூல்லிப் எனப்படும் போதை பொருள். இது குறிப்பாக பள்ளி மாணவர்களை குறிவைத்து விற்கப்படுகிறது. இது கேரளாவிலிருந்து கொண்டு வரபட்டுள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் அதிகளவில் புகையிலை பயன்பாடுள்ளது. தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
புகையிலை விற்கும் ஒரு கடையை மூடினால் வேறோரு பகுதியில் மீண்டும் ஒரு கடை துவக்கப்படுகிறது. அதற்கு காரணம் அதிகளவில் முதலீடும் அதிகளவு லாபமும் தான். தமிழக அரசு புகையிலை பொருட்களுக்காக பல்வேறு விழிப்புணர்வுகளையும் செய்து வருகிறது. வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவு புகையிலேயே பயன்படுத்துகிறார்கள், அவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக முக்கியம். இவ்வாறு காவல் ஆணையர் தெரிவித்தார்.
புற்றுநோய் காரணமாக வருடத்திற்கு 9 லட்சம் பேர் இறந்து வருவது வேதனை அளிப்பதாக, ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் குகன் குறிப்பிட்டார்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil